உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விலையில்லாததால் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி பரப்பு குறையுது:

விலையில்லாததால் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி பரப்பு குறையுது:

விருதுநகர்: வெண்ணிற பூமியான விருதுநகர் மாவட்டத்தில் பருத்தி விலையில்லை, கொள்முதல் பாதுகாப்பு இல்லாததால் பருத்தி பயிரிட்ட விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் முன்பு அதிகப்படியான பருத்தி விளைச்சலால் 'வெண்ணிற பூமி' என அழைக்கப்பட்டது. காய் புழு தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவில் அதிகரித்ததால் நாளடைவில் பருத்தி சாகுபடி குறைந்தது. விவசாயம் பெரும் நஷ்டத்தை சந்திக்கவே விவசாயிகள் மக்காசோள சாகுபடிக்கு மாறினர். இதனால் படிப்படியாக பருத்தி சாகுபடி குறைந்து தற்போது சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 15 ஆயிரம் எக்டேர் வரை பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. 2021ல் 14 ஆயிரத்து 447 எக்டேர் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. 2022-23ல் 21 ஆயிரத்து 107 எக்டேர், 2023-24ல் 16 ஆயிரத்து 339 எக்டேர், 2024-25ல் 14 ஆயிரத்து 028 எக்டேர் வரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கோடை பருவ பருத்தி பிப்ரவரி, மார்ச்சிலும், குளிர் கால பருத்தி செப்டம்பர், அக்டோபரிலும் நடவு செய்யப்படுகிறது.2024ல் பருத்தி விளைச்சல் குறைவாக இருந்தது. தற்போதைய பருத்தி விலை கிலோவிற்கு ரூ.65 முதல் 70 ஆக குறைந்து விட்டது. பறிக்கும் கூலி மட்டும் கிலோவுக்கு ரூ.30. நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 கிலோ தான் பறிப்பர். மருந்து விலை உயர்வு, போக்குவரத்து செலவு உள்ளிட்ட காரணங்களால் இந்தாண்டு பருத்தி நடவு செய்த விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.அரசு பருத்தியை விவசாய விளைபொருள் பட்டியலில் இருந்து எடுத்து விட்டது. இதனால் கொள்முதல் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது. தனியார் வியாபாரிகள் வைக்கும் விலைக்கு நஷ்டத்தில் தான் விற்க வேண்டி உள்ளது. ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் இநாம் திட்டத்தில் விற்றாலும் பணம் கிடைப்பதில் சிக்கல் உள்ளது என நினைத்து விவசாயிகள் அங்கும் செல்வதில்லை. வெண்ணிற பூமியான விருதுநகரில் பருத்தி வந்த சோதனை விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஏலம் முறைப்படி உள்ளூர் விவசாயிகள், வெளியூர் வியாபாரிகளை வைத்து பருத்திகளை விற்று தர மாவட்ட நிர்வாகம், வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். குறைந்து வரும் பருத்தி சாகுபடியை அதிகரிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ