உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமான ரோடு; தேங்கும் கழிவுகள், வீணாகும் கட்டடங்கள்

சேதமான ரோடு; தேங்கும் கழிவுகள், வீணாகும் கட்டடங்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்: சேதமான ரோடு, தேங்கும் கழிவுகள், வீணாகும் கட்டடங்கள் என பல்வேறு பிரச்னைகளால் கோட்டை பட்டி ஊராட்சி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டைப்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த கண்மாய்கரை ரோட்டால் விபத்து அபாயம், தேங்கும் கழிவுகளால் சுகாதாரக் கேடு, செயல்படாத ஊராட்சி பழைய அலுவலகம் மற்றும் பள்ளி கட்டிடம், மருத்துவ வசதி இன்றி தவிப்பு, பஸ் வசதி இல்லாமல் சிரமம் என பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.கோட்டைப்பட்டி, கண்ணன் காலனி ஆகிய பகுதிகளை கொண்ட இந்த ஊராட்சியில் மின்வாரிய அலுவலகம், ஆதி திராவிட மாணவர் விடுதி, நூலகம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ரேஷன் கடை போன்ற அரசு அலுவலகங்கள் உள்ளது. கோட்டைப்பட்டியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் வருவதற்கு தினமும் காலை, மாலை இரு நேரங்களில் மட்டுமே செண்பகத் தோப்பிற்கு செல்லும் பஸ் இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கோட்டைப்பட்டியின் குடியிருப்புபகுதியில் இருந்து தெற்கு கடைசி வரை உள்ள மெயின் ரோட்டில் போதிய ஆழமும், அகலமும் கொண்ட வாறுகால் வசதி இல்லாமல் சுகாதார கேடு காணப்படுகிறது. ரோட்டிற்கு மேற்கு பகுதியில் இருக்கும் வாறுகால்களில் கழிவுகள் தேங்கி கொசு தொல்லை ஏற்படுத்துகிறது. பொன்னாங்கண்ணி கண்மாய் கரை போதிய அகலம் இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ள நிலையில் மினி பஸ் மட்டும் ஓரமாகவே அச்சத்துடன் பயணித்து வருகிறது.இப்பகுதி மக்களுக்கு என தனியாக ஆரம்ப சுகாதார நிலைய வசதி இல்லை. இதனால் மருத்துவ வசதி பெறுவதில் மிகுந்த சிரமத்தை மக்கள் சந்திக்கின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டடம், பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் பயனின்றி வீணாகி வருகிறது. ரேஷன் கடையும் முழு நேரமும் இயங்கவில்லை. இப்பகுதி மக்களுக்கான தனியாக ஒரு சமுதாயக்கூடம் இல்லை. கம்மாபட்டியில் இருந்து கண்ணன் காலனி வழியாக மம்சாபுரம் செல்லும் ரோட்டில் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதாரக் கேடு காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ