உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கார் மாறுவதும், கால் மாறுவதும் பழனிசாமிக்கு சாதாரணம் துணை முதல்வர் உதயநிதி பேச்சு

கார் மாறுவதும், கால் மாறுவதும் பழனிசாமிக்கு சாதாரணம் துணை முதல்வர் உதயநிதி பேச்சு

சாத்துார் : ''அமித்ஷாவை சந்தித்து விட்டு பழனிசாமி முகத்தை மூடி வந்த காரணம் என்ன. கார் மாறுவதும் கால் மாறுவதும் அவருக்கு சாதாரணம்.'' என சாத்துாரில் நடந்த தி.மு.க.,நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி கூறினார். சாத்துாரில் சட்டசபை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை வகித்த துணை முதல்வர் உதயநிதி மேலும் கூறியதாவது: சாத்துாருக்கு புதிய பஸ் ஸ்டாண்ட் , பயணியர் விடுதி மாளிகை, கட்டப்பட்டுள்ளது. வெம்பக் கோட்டை விஜய கரிசல்குளத்தில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. அமித்ஷாவை சந்தித்து விட்டு பழனிசாமி முகத்தை மூடி வந்த காரணம் என்ன. கார் மாறுவதும் கால் மாறுவதும் அவருக்கு சாதாரணம், என்றார். மாலையில் விருதுநகரில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், 837 பேருக்கு ரூ.10.84 கோடிக்கும் உதவிகளும், ரூ.124.57 கோடிக்கு 9 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.25.89 கோடிக்கு முடிவுற்ற 5 பணிகளை திறந்து வைத்தும் அவர் பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 50 லட்சம் டிரிப் பயணங்களை பெண்கள் செய்துள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தில் 22 ஆயிரம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். காலை உணவு திட்டத்தில் 72 ஆயிரத்து 400 குழந்தைகள் பயன்பெறுகின்றனர். மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 3 லட்சத்து 28 ஆயிரம் பெண்கள் மாதம் மாதம் ரூ.ஆயிரம் பெறுகின்றனர். முதல்வர் ஸ்டாலின் உங்களுக்கு பக்கபலமாக உள்ளார். அவருக்கு நாமும் பக்கபலமாக இருக்க வேண்டும். 2026 சட்டபை தேர்தலிலும் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும், என்றார். அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமை செயலாளர்கள் பிரதீப் யாதவ், உமா, கலெக்டர் சுகபுத்ரா, டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், எஸ்.பி.,கண்ணன், எம்.எல்.ஏ.,க்கள் தங்கப்பாண்டியன், சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் , உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்கள் மீதான நடவடிக்கையில் தாமதம் வேண்டாம் என்றும்,அனைத்து ஊராட்சிகளிலும் கருணாநிதி விளையாட்டு உபகரணங்களை கேட்பவர்களுக்கு வழங்குவதுடன், அவற்றை மாணவர்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய துணை பி.டி.ஓ.,க்களை பொறுப்பாளர்களாக நியமித்து கண்காணிக்க வேண்டும் என்றும், செயல்படாத மகளிர் குழுக்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கிருஷ்ணன் கோவிலில் நடந்த கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது; தி.மு.க., எனும் ஆலமரத்தை 10 யானைகள் வந்தாலும் அசைக்க முடியாது. தற்போது தமிழகத்தில் நமக்கு தகுதியான எதிரிகள் இல்லை. இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக தி.மு.க., ஆட்சி உள்ளது.. பழனிசாமி ஆட்சியில் பல உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய அண்ணா தி.மு.க., தற்போது அடிமை தி.மு.க.,வாக, அமித் ஷா தி.மு.க.,வாக மாறிவிட்டது.அ.தி.மு.க.,வின் முடிவுகளை பா.ஜ., எடுக்கிறது. அவர்களுடன் அ.தி.மு.க ., வந்தால் மக்கள் விரட்டி அடிப்பார்கள். 2021 தேர்தலில் தி.மு.க. ஜெயிக்காத தொகுதிகளில் கூட, வரும் தேர்தலில் நாம் ஜெயிக்க வேண்டும். இதற்கு மக்களுடன் நெருக்கமாக இருந்து ஆதரவு அலையை ஓட்டாக மாற்ற வேண்டும், என்றார். முன்னதாக விருதுநகரில் அருப்புக்கோட்டை முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், தி.மு.க., வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜகுரு, வ.புதுப்பட்டி பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி, பேரூர் செயலாளர் சாந்தாராம், முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி உள்பட பலர் வரவேற்பளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை