விஜய கரிசல்குளத்தில் பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளை சுத்தப்படுத்தி, ஆவணப்படுத்தும் பணி நடந்தது.இங்கு நடைபெறும் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் சுடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், வட்ட சில்லு, சூது பவள மணி, தங்க மணி உள்ளிட்ட 4100 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் சுடு மண்ணால் ஆன முழுமையான பானைகள், உடைந்த பானை ஓடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இந்நிலையில் பானை ஓடுகளை சுத்தப்படுத்தி, ஆவணப்படுத்தும் பணி நடந்தது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறியதாவது: இங்கு முன்னோர்கள் தொழிற்கூடம் நடத்தியதற்கான ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. பானைகள், சங்கு வளையல்கள் கிடைத்துள்ளது. பானை ஓடுகளை சுத்தப்படுத்தி அதில் ஏதேனும் குறியீடுகள், எழுத்து உள்ளதா என ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் பணி நடக்கிறது என்றார்.