உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி.,யில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை

ஸ்ரீவி.,யில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பில் நகராட்சி கிணறுகள் முழு அளவில் வறண்டதாலும், குழாய் உடைப்பின் காரணமாக போதிய அளவிற்கு தாமிரபரணி தண்ணீர் வராததாலும் நகரில் குடிநீர் சப்ளை 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சிக்கு செண்பகத் தோப்பு பேயானற்றில் கிணறுகள், போர்வெல்கள் மூலமாக 2011க்கு முன்பு வரை குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. 2008ல் ரூ. 29 கோடியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து 120 கி.மீ., தூரத்திற்கு குழாய்கள் அமைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டுவரப்பட்டு 2011 மார்ச் முதல் குடிநீர் சப்ளையாகி வருகிறது. ஆனால், திட்டம் செயல்பாட்டுக்கு வந்த நாள் முதல் தற்போது வரை அடிக்கடி ஏற்படும் மின்தடை, குழாய் உடைப்பு காரணமாக நகரில் சீரான குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய அளவில் மழை பெய்யாத நிலையில் உள்ளூர் பேயனாறு தண்ணீர் வரத்து குறைந்தது. குழாய் உடைப்பின் காரணமாக தாமிரபரணி தண்ணீர் வரத்தும் ஐந்தில் ஒரு பங்காக குறைந்தது. இதனால் நகரில் பெரும்பாலான வார்டுகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் சப்ளையாவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன் கூறுகையில், தாமிரபரணியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துாருக்கு குடிநீர் வரும் சிமெண்ட் குழாய்களில் பல இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டு முழு அளவில் தண்ணீர் கிடைக்க வில்லை. செண்பகத்தோப்பில் கிணறுகள் வறண்டதாலும் குடிநீர் சப்ளை தாமதமாகிறது. சேதமடைந்த தாமிரபரணி சிமெண்ட் குழாய்களை முழுமையா அகற்றிவிட்டு ஒழுகரை குழாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு என தனியாக ஒரு குடிநீர் திட்டம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை