தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெற கூடுதல் ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு
விருதுநகர் : தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறவும், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும் கூடுதலான ரயில்களை இயக்குவது பற்றி பாம்பன் வரும் பிரதமர் மோடி அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தென் மாவட்டங்களின் முக்கிய நகரமாக மதுரை உள்ளது. மதுரைக் கோட்டத்தில் மெமு ரயில் சேவைகள் தற்போது வரை இல்லாத நிலையே உள்ளது. தெற்கு ரயில்வேயில் உள்ள திருச்சி, சேலம், திருவனந்தபுரம், சென்னை ஆகிய கோட்டங்களில் மெமு ரயில் சேவை உள்ளது. கடந்த தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை யொட்டி மதுரை - சென்னை இடையே சிறப்பு ரயில்களாக மெமு ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் ஏராளமான பயணிகள் குறைந்த செலவில் பயணம் செய்தனர்.எனவே, மதுரையிலிருந்து விருதுநகர் வழியாக திருநெல்வேலி வரையிலும், மதுரை- விருதுநகர், செங்கோட்டை வரையிலும், மதுரை, உசிலம்பட்டி, தேனி வழியாக போடி வரையிலும், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் வரையிலும், மதுரை, திண்டுக்கல், திருச்சி வரையிலும், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக காரைக்குடி வரையிலும் புதியதாக மெமு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்துார் வரை இயங்கும் பயணிகள் ரயிலை, கோவில்பட்டி, விருதுநகர் வழியாக மதுரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். கொல்லத்தில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலை மதுரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். சபரிமலை சீசனுக்காக செகந்திராபாத்திலிருந்து கொல்லம் வரை வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இயக்க வேண்டும்.நிறுத்தப்பட்ட ஹூப்ளி- கொல்லம் எக்ஸ்பிரஸ், கொச்சுவேலி -தாம்பரம் விரைவு ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், திண்டுக்கல் முதல் மதுரை வரை இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். கோயம்புத்தூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.ராமேஸ்வரம்- பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பின்போது, இவ்வழித்தடத்தில் புதிய ரயில் ஒன்றை இயக்கிடவும், ராமநாதபுரம் பரமக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும் வகையில் ரயில் ஒன்றை இயக்கவும், செங்கோட்டையில் இருந்து ராஜபாளையம், விருதுநகர், மதுரை வழியாக தாம்பரம் வரை செல்லும் முன்பதிவில்லாத அந்தியோதயா ரயிலை இயக்க வேண்டுமெனவும் சுற்றுலா பயணிகள் யாத்திரிகர்கள், மக்கள் விரும்புகின்றனர்.