தடை செய்த ‛பம்பர் பொருத்தி இயங்கும் வாகனங்கள் அதிகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் கார்களில் முன்பகுதியில் தடை செய்யப்பட்ட பம்பர் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது. இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மாவட்டத்தில் நகர் மற்றும் ஊரகப்பகுதிகளில் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் கார்களில் பம்பர் பொருத்தி இயக்கப்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விபத்துக்களின் போது பம்பர்கள் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பிற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அரசால் தடை செய்யப்பட்டது.ஆனால் இந்த தடை உத்தரவு அமலில் இருந்தும் தற்போதும் கார்களின் முன்பகுதியில் பம்பர் பொருத்தி இயக்கப்படுகிறது. மேலும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தங்கள் கார்களில் பம்பர் பொருத்தி அதன் மீது கட்சி கொடி கட்டியவாறு சர்வசாதரணமாக சென்று வருகின்றனர். பம்பர் பொருத்திய வாகனங்களின் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளும், போக்குவரத்து போலீசாரும் எடுக்கவில்லை.டூவீலரில் ஹெல்மெட் அணிதல், மது அருந்தி விட்டு வாகனங்கள் ஒட்டுதல் ஆகிய சோதனைகளில் ஈடுபடுபவர்கள் கார்களில் கட்சி கொடி இருப்பதால் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்களா என்ற சந்தேகம் சக வாகன ஓட்டிகளுக்கு எழுந்துள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பம்பர் பொருத்தி இயங்கும் வாகனங்கள் மீது துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.