குப்பைக் கிடங்குகளில் உயிரி நிலப்பரப்பு மீட்டெடுக்கும் நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நகர், புறநகர், கிராமங்களில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் குப்பைக் கிடங்குகளில் உயிரி நிலப்பரப்பை மீட்டெடுக்கும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பை அந்தந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் கொட்டப்பட்டு கிடங்குகளாக மாற்றப்பட்டுள்ளது. பெருகி வரும் மக்கள் தொகை எண்ணிக்கையால் கிடங்குகளின் பரப்பு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.இது போன்ற குப்பை கிடங்குகள் பெரும்பாலும் புறநகர், ஊரகப்பகுதிகளுக்கு வெளியே இருந்தாலும் மக்காத தன்மையுடைய நெகிழி குப்பை மண்வளத்தை பாதித்து நிலத்தடியில் நீர்மட்டம் சேகரிக்கப்படுவதை குறைக்கிறது. இவற்றை முழுவதும் அகற்றி உயிரி நிலப்பரப்பை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.ஆனால் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒரே இடத்தில் செயல்படும் குப்பை கிடங்குகளில் உயிரி நிலப்பரப்பை மீட்டெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் மண் வளம் முழுவதும் பாழாகும் நிலையே தொடர்கிறது. குப்பை கிடங்குகள் பெரும்பாலும் நீர்வரத்து ஓடைகள், கண்மாய் அருகே செயல்படுவதால் நீர்வளமும் பாதிக்கும் சூழல் உண்டாகியுள்ளது.எனவே குப்பை கிடங்குகளில் இருந்து உயிரி நிலப்பரப்பை மீட்டெடுக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக துவங்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.