ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு; மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
விருதுநகர்: கோடை வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் வெயிலின் தாக்கத்தால் மனிதர்கள், கால்நடைகளுக்கு ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு குறித்து மாவட்டங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பே கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.பொதுவாக உடலின் நீர்சத்து குறையும் போது சிறுநீர் வெளியேறும் அளவும் குறைந்து விடுகிறது. வெயில் காலத்தில் அதிக படியான நீர்சத்து தோல் மூலம் வெளியேறுகிறது. சோடியம் குளோரைடு, பொட்டாசியம் உள்ளிட்ட தாதுப் பொருட்களும் தோல் மூலம் வெளியேறுகிறது.உடலுக்கு தேவையான நீர்சத்து இல்லாத நேரத்தில் மயக்கம் ஏற்படுகிறது. இதை தான் ஹீட் ஸ்ட்ரோக்' என்ற வெப்ப வாதம் என கூறுகிறோம். இதை தொடர்ந்து கவனிக்காமல் விட்டால் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.இந்த பாதிப்புகள் பெரும்பாலும் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோரை பாதிக்கிறது. இதனால் வெயில் காலத்தில் வெளியே செல்லும் போது எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள், தற்காப்பு வழிமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. இந்த பாதிப்புகள் மனிதர்களை மட்டுமில்லாமல் கால்நடைகளை பாதிக்கிறது.எனவே ஹீட் ஸ்ட்ரோக் என்ற வெப்ப வாதம்' குறித்து மாவட்டங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.