மேலும் செய்திகள்
அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
20-Oct-2025
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ரோடு டெண்டரை வாங்கி தருவதாக கூறி ரூ.55 லட்சம் மோசடி செய்த போலி பி.டி.ஓ., சுதா 37, அவரது தந்தை வெங்கட்ராமானுஜம் 72, பொறியாளர் சங்கரநாராயணன், உதவியாளர் பீமா பேகம் உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் சுதா, வெங்கட்ராமானுஜத்தை கைது செய்தனர். சிவகாசி பேராபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் தொழிலதிபர் கண்ணன் 51. அச்சகம், கிரானைட், டைல்ஸ் நிறுவனம், குவாரி நடத்தி வருகிறார். அறக்கட்டளை மூலம் முதியோர் காப்பகம் நடத்த முயற்சி செய்தார். இவரது நிறுவனத்தில் பணிபுரிந்த பொறியாளர் சங்கரநாராயணன் 2025 ஜன. 4ல் சிவகாசி கிரகத்தாயம்மாள் நகரை சேர்ந்த சுதா 37,வை ஊரக வளர்ச்சி முகமையில் ஒருங்கிணைப்பாளராக இருப்பதாகவும், விரைவில் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு பி.டி.ஓ., ஆக பதவி உயர்வு பெற இருப்பதாகவும் கூறி அறிமுகப்படுத்தினார். அடையாள அட்டையும் காட்டினார். தான் வீடு கட்ட உள்ளதாகவும், அதற்கு கிரானைட் கற்கள் தேவைப்படுவதாகவும் கூறி கண்ணனுக்கு சொந்தமான குவாரியை சுதா பார்த்தார். பின்னர் பேராபட்டி ரோடு அமைப்பதற்கு டெண்டர் கோரப்படுகிறது. அதை பெற்றுத் தருகிறேன் என்று கூறியும், முதியோர் காப்பகம் கட்ட கலெக்டரிடம் பேசி அனுமதி வாங்கி தருவதாகவும் கூறி பல தேதிகளில் ரூ.55 லட்சத்து 42 ஆயிரம் பெற்றார். ஆனால் அனுமதி வாங்கி தராமலும், பணத்தையும் தராமல் இழுத்தடித்தார். விசாரித்ததில், சுதா போலி பி.டி.ஓ., என்பது தெரிய வந்தது. இதையடுத்து கண்ணன் புகாரில் சுதா, அவரது தந்தை வெங்கட்ராமானுஜம், சங்கரநாராயணன், உதவியாளர் திருத்தங்கல் பீமா பேகம் உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். சுதா, வெங்கட்ராமானுஜத்தை கைது செய்தனர்.
20-Oct-2025