உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் திண்டாட்டம்: நுாறு நாள் திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த எதிர்பார்ப்பு

வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் திண்டாட்டம்: நுாறு நாள் திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த எதிர்பார்ப்பு

ராஜபாளையம்: மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பருவ மழை விவசாயிகளை ஏமாற்றாத அளவு பெய்துள்ளதால் தரிசாக உள்ள நிலங்களை ஆர்வமுள்ள பலரும் சாகுபடிக்கு கொண்டு வருகின்றனர். ஆனால் பல இடங்களில் விவசாய பணிகள் செய்ய ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டுமென விவசாயிகள் விரும்புகின்றனர். மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 450 ஊராட்சிகளில் 100 நாள் வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் நீர் வழிப் பாதையை சரி செய்தல், மரக்கன்று நடுதல், பண்ணை குட்டை அமைத்தல், குளம் துார் வாருதல் போன்ற பணிகள் நடக்கின்றன. கிராமத்தை சேர்ந்த விவசாய தொழிலாளர்களுக்கு வேலையற்ற நிலை ஏற்படக் கூடாது என்று கொண்டுவரப்பட்ட இத்திட்டம் பல்வேறு வகைகளில் விவசாய பணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஊராட்சிகளிலும் வேலை பளு குறைவு, பணி உறுதி போன்ற காரணங்களுக்காக தொழிலாளர்கள் ஆர்வமுடன் இதில் பங்கேற்கின்றனர். இயந்திரங்களை கொண்டு குறைந்த நேரத்தில் செய்ய வேண்டிய பணிகளை ஒப்படைப்பதால் ஏற்கனவே தேவைப்படும் கூலி தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை அதிகரிக்கிறது. ராஜபாளையம் வட்டாரத்தில் அதிக ஆட்கள் தேவைப்படும் நெல் சாகுபடி ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடந்து வரும் நிலையில் விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை இதற்கான பாதிப்பை அதிகம் ஏற்படுத்தி வருகிறது. நெல் விவசாயத்தில் வரப்பு எடுத்தல், நாற்றுப் பாவுதல், அறுவடை என ஆட்கள் அதிகம் தேவைப்படுவதால் தகுந்த காலங்களில் ஆட்கள் கிடைப்பதில்லை. நடவு, உழவு, அறுவடை என இயந்திரங்களை வைத்து சமாளிக்க நினைத்தாலோ, அரசு இயந்திரங்களுக்கு மானியம் அளித்தாலும் சிறு குறு விவசாயிகளுக்கு இதற்கான செலவு சாத்தியப்படுவது இல்லை. சீசன் நேரங்களில் ஒரு சேர பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் அதிக கூலி கொடுத்து ஆட்களை வரவழைத்து சமாளித்தாலும் முடிவதில்லை. பாரம்பரிய விவசாய கூலி தொழிலாளர்கள் 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்று விடுவதால் இதன் பாதிப்பு விளைச்சல் குறைவு, அதிக செலவு என வெளிக்காட்டுகிறது. விவசாயத்திற்கு வாய்ப்பு இருந்தும் இந்நிலை ஏற்படுவதால் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது போல் 100 நாள் வேலை பணியாளர்களை விவசாய பணிகளுக்கு அனுப்ப பரிசீலிப்பதன் மூலம் சாகுபடி பரப்பில் தயக்கம் இன்றி விவசாயிகள் ஈடுபட ஏதுவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ