மக்காச்சோளத்தால் விவசாயிகள் முதலாளியாகலாம் செய்நிலம் ஏ.பி.சி., நிறுவனர் ஜெகன்நாதன் பேச்சு
விருதுநகர்:இந்தியாவின் பெட்ரோல், டீசலில் விவசாயிகளின் விளைபொருளான மக்காச்சோளத்தின் எத்தனால் கலப்பு விரைவில் 25 சதவீதமாக பயன்படுத்தப்பட உள்ளது. இதை பயன்படுத்தி கொண்டால் விவசாயிகள் முதலாளிகளாக முன்னேறலாம் என விருதுநகரில் செய்நிலம் அக்ரி பிசினஸ் கல்சர்(ஏ.பி.சி.,) நிறுவனர் ஜெகன்நாதன் தெரிவித்தார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 33 உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களின் தலைமை அதிகாரி, இயக்குனர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் வேளாண் வணிக துணை இயக்குனர் ரமேஷ் தலைமையில் நடந்தது.இதில் பங்கேற்ற செய்நிலம் ஏ.பி.சி., நிறுவனர் ஜெகன்நாதன் பேசியதாவது: தமிழகத்தில் பருத்தி, மிளகாய், மக்காச்சோளம், எள் ஆகிய நான்கு பயிர்களும் விளையும் ஒரே பகுதி விருதுநகர் மாவட்டம்.மக்காச்சோளத்தில் இருந்து எடுக்கப்படும் எத்தனால் பெட்ரோலில் 15 சதவீதம் கலப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவின் பெட்ரோல், டீசலில் விவசாயிகளின் விளைபொருளான மக்காச்சோளத்தின் எத்தனால் விரைவில் 25 சதவீதமாக பயன்படுத்தப்படவுள்ளது. இதை பயன்படுத்தி கொண்டால் விவசாயிகள் முதலாளிகளாக முன்னேற்றம் அடையலாம். விவசாயிகள் கூடுதல் விலையை எதிர்பார்க்காமல் கூடுதல் விளைச்சலை ஏற்படுத்த வேண்டும், என்றார்.எஸ்.எல்.பி. எத்தனால் நிறுவன பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது: எத்தனால் தயாரிப்பு திட்டத்தை மத்திய அரசு மூன்று காரணங்களுக்காக ஊக்குவிக்கிறது. மாசு, நாட்டின் அன்னிய செலாவணியை குறைக்கவும், விவசாயிகள் தயாரிக்கும் அரிசி, மக்காச்சோளம் விலையை அதிகப்படுத்துவதற்காக திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.தமிழகத்தில் முதல் முறையாக எஸ்.எல்.பி. எத்தனால் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு மக்காச்சோளம் தினமும் 600 டன் வாங்கி அதை 2 லட்சம் லிட்டர் எத்தனாலாக மாற்றும் திறன் உள்ளது. ஆலைக்கு தேவையான மக்காச்சோளம் அதிக அளவில் பீஹார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வாங்கப்படுகிறது. தமிழகத்தில் குறைந்த அளவு மக்காச்சோளம் கிடைக்கிறது. இதை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்து லாரிகளில் ஏற்றிய ஒரு மணி நேரத்தில் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மக்காச்சோளம் ஏற்றி அனுப்ப சாக்கு வழங்கப்படும். அனைத்து ரசீதுகளும் நேரடியாக கொடுக்கப்படும், என்றார்.வேளாண் வணிக துணை இயக்குனர் ரமேஷ் பேசியதாவது:நெல்லில் இருந்து மக்காச்சோளத்திற்கு விவசாயிகள் மாறியதற்கு முக்கிய காரணம் நல்ல விலை கிடைப்பது. பருத்தி விளைச்சல் இருந்தாலும் வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். மக்காச்சோளத்திற்கு நல்ல கொள்முதல் நிறுவனம் கிடைத்தது போல பருத்தி, எள் பயிர்களுக்கும் நல்ல வாங்குவோர் கிடைக்க வேண்டும், என்றார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், சமூக கல்வி, பொருளாதார மேம்பாட்டு நிறுவன மண்டல ஒருங்கிணைப்பாளர் சின்ன முருகன் பங்கேற்றனர்.