உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மண் மேவிய வரத்துக்கால்வாய்; சேதமான மதகுகள் பாதிப்பில் வேப்பிலைப்பட்டி கண்மாய் விவசாயிகள்

மண் மேவிய வரத்துக்கால்வாய்; சேதமான மதகுகள் பாதிப்பில் வேப்பிலைப்பட்டி கண்மாய் விவசாயிகள்

சாத்துார்: சாத்துார் வேப்பிலை பட்டி கண்மாய்க்கு நீர்வரத்து கால்வாய்கள் மண் மேவியதால் கண்மாய்க்கு முழுமையான அளவில் தண்ணீர் வருவதில்லை மேலும் மதகுகள் சேதத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.வேப்பிலை பட்டி கண்மாயில் 3 மதகுகள் உள்ளன. பெரிய கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் போது சிறிய கண்மாய் நிரம்பும். இந்த இரு கண்மாய் பாசனங்களின் மூலம் இ முத்துலிங்கபுரம்,சக்கம்மாள்புரம் வேப்பிலைப்பட்டி ஆகிய கிராமத்தில் உள்ள விவசாயிகள் பாசன வசதி பெற்று வந்தனர்.கன்னி சேரி புதுார்,கோவில் புலிக் குத்தி, வெங்கான் நாயக்கன் பட்டி, சின்னக்காமல் பட்டி பகுதியில் இருந்து வரும் மழைநீர் வேப்பிலைப்பட்டி பெரிய கண்மாயை வந்து அடைகின்றன.இந்த கண்மாய் நீர்ப்பாசனம் மூலம் 22 ஹெக்டேர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுகிறது. நெல் ,கம்பு ,சோளம் என பல்வேறு பயிர்கள் விளைந்து வந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக கண்மாயின் நீர்வரத்து ஓடைகள் துார்வாரப்படாததால் கண்மாய் முழுமையான அளவில் நிரம்ப வில்லை.கண்மாயில் உள்ள மூன்று மதகுகளும் பழுதான நிலையில் உள்ளது.இந்த மதகுகள் மூலம் தண்ணீர் செல்லும் பாசன கால்வாயும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.கண்மாய் பாசனம் மூலம் விவசாய பணிகள் செய்த விவசாயிகள் தற்போது கிணற்று பாசனம் மூலம் சிறிதளவு விவசாயம் செய்து வருகின்றனர். பலர் நிலங்களை மானாவாரியாக மாற்றி மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களை விளைவித்து வருகின்றனர்.இந்த பயிர்களையும் காட்டு பன்றிகள், முயல்கள் சேதப்படுத்தி விடுவதால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். கண்மாயில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்றுவதோடு மதகுகளை சீரமைக்கவும் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

காட்டுப்பன்றிகளால் பாதிப்பு

பாலமுருகன், விவசாயி: ஒரு சில விவசாயிகள் மட்டுமே தற்போது விவசாய பணிகளை செய்து வருகிறார்கள்.பலர் விவசாயத்தை கைவிட்டு மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர்.காரணம் காட்டு பன்றிகள், முயல்கள் தொல்லை அதிகரித்து விட்டது. ஒரு விவசாயி ரெண்டு ஏக்கர் மக்காச்சோளம் பயிர் செய்திருந்த நிலையில் காட்டு பன்றிகள் ,முயல்கள் புகுந்து பயிர்களை தின்று நாசம் செய்து விட்டது. கண்மாயில் வளர்ந்துள்ள முள் செடிக்குள் காட்டுப் பன்றிகள் மறைந்து கொள்கின்றன. இவற்றை அகற்ற வேண்டும்.

கண்மாய் நிரம்பவில்லை

மாரியம்மாள், விவசாயி: கண்மாய் நிரம்பினால் தானே விவசாயம் செய்வதற்கு கண்மாய் நிரம்பவே இல்லை.நீர் வரும் வழித்தடங்கள் எல்லாம் முள் செடி முளைத்து காடு போல மாறிவிட்டது. பலத்த மழை பெய்தாலும் முள் செடிகள் தண்ணீரை உறிஞ்சி விடுகின்றன. விவசாயம் செய்வதற்கு போதுமான தண்ணீர் இல்லை. தண்ணீர் இல்லாததால் மதகுகள் சேதமடைந்து பழுதாகி உள்ளது. கண்மாயை துார்வாரி காட்டுப்பன்றிகளை அகற்றினால் தான் விவசாயம் செழிக்கும்.விவசாய பணிக்கு ஆட்கள் கிடைப்பது கிடையாது.

பாசன கால்வாய் இல்லை

சுப்புத்தாய், விவசாயி: கண்மாயில் இருந்து தற்போது தண்ணீர் பாசனம் செய்யப்படுவது கிடையாது. பாசன கால்வாய் முற்றிலுமாக சேதம் அடைந்து விட்டது. தற்போது கிணற்று பாசனம் மூலம் ஒரு சில விவசாயிகள் தோட்ட பயிர்களை விளைவித்து வருகின்றனர்.கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பது கிடையாது.அவரவர்கள் தோட்டத்தில் சொந்த ஆட்கள் மூலமாக பணிகள் செய்து கொள்கிறோம்.முன்பு போல விவசாய பணிக்கு ஆட்கள் கிடைக்க வேண்டும்.கண்மாயை துார்வாரவும் பாசன கால்வாய் அமைக்கவும்அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் இந்த பகுதியில் விவசாயம் செழிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை