பட்டாசு குழாய் தயாரிக்கும் நிறுவனத்தில் மின்கசிவு தீ விபத்து
விருதுநகர்: விருதுநகர் அருகே கோவிந்தநல்லுாரில் 3 மாதங்களாக பூட்டிக்கிடந்த பட்டாசு குழாய் தயாரிக்கும் நிறுவனத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.விருதுநகர் அருகே கோவிந்தநல்லுாரியில் சிவகாசியை சேர்ந்த அற்புதராஜ் 52, என்பவருக்கு சொந்தமான அலெக்ஸா டியூப் ஒர்க்ஸ் எனும் பட்டாசுகளுக்கு தேவையான அட்டை குழாய் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. நேற்று மதியம் 12:30 மணிக்கு இந்த அட்டைக்குழாய் கம்பெனியில் திடீரென தீப்பற்றி எரிந்து கரும்புகை வெளியேறியது. தீயணைப்பு போலீசார் தீயை அணைத்தனர். உற்பத்தி சாதனங்கள்,தகர செட், கூரை ஆகியவை இடிந்து தரைமட்டமாகியது. மூன்று மாதங்களாக இந்த நிறுவனம் மூடிக்கிடந்ததால் ஆட்கள் யாருமில்லை. உயிர் சேதமும் இல்லை. இந்நிலையில் பூட்டிக்கிடந்த இந்த கம்பெனியில் மின் கசிவினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.