தீப்பற்றினால் பனை மரங்கள் பாதிக்கும் அபாயம் சருகுகளை அப்புறப்படுத்த வலியுறுத்தல்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பனிக்காலம் முடிந்து இலையுதிர்க்காலம் நெருங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ஜனவரி இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கமும் அதிகரிக்கும். இந்த சூழலில் ரோட்டோரத்தில் சருகுகளும் அதிகரிக்கின்றன. தீப்பற்றினால் ரோட்டோரத்தில் வளரும் மரங்களும் பாதிப்பை சந்திக்கின்றன.மாவட்டத்தில் பிப். முதல் இலையுதிர் காலம் துவங்கும். அந்நேரத்தில் தரிசு நிலங்கள், ஓடைகளில் வளர்ந்துள்ள செடிகள்நீரின்றி வறண்டு சருகுகளாய் மாறும். அதே போல் மரங்களின் இலைகளும் சருகாகி கிடக்கும். இதற்கு சிலர் தீ வைத்து சென்று விடுவதால் ரோட்டோர மரங்கள் எரிந்து நாசமாகின்றன. குறிப்பாக இதில் பனைமரங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.தமிழக அரசு பனை மரங்களை காக்க பனை வாரியம் அமைத்துள்ளது. அதிகாரிகளும் நீர்நிலைகளின் கரைகளில் பனை விதைகளை நடுகின்றனர். பனைக்கு என தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு உற்பத்தி பொருட்கள் செய்யப்படுகின்றன. விருதுநகர் வடமலைக்குறிச்சி, வடமலாபுரம், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் என பல்வேறு பகுதிகளில் பனைமரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவை இலையுதிர் காலங்களில் சருகுகளை எரிப்பதால் பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.இந்தாண்டாவது பனைமரங்கள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றின் கீழே இருக்கும்சருகுகளை அப்புறப்படுத்த வேண்டும். அதே போல் பனை மரங்கள் அருகே விளைநிலங்கள் இருந்தால், அவற்றில் மக்காசோள கழிவுகள் இருந்தாலும் அவற்றையும் அப்புறப்படுத்த வேண்டும். இல்லாவிடிவில் அவை எரிக்கப்பட்டும் பனை மரங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.