| ADDED : அக் 12, 2025 06:36 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பூக்கடை பஜாரில் மழை வெள்ளம் தேங்குவதை தடுக்க பல லட்சங்களை கொட்டி வாறுகால் கட்டியும் சிறிய மழைக்கு பஜார் வெள்ள காடாக மாறியது கண்டு அப்பகுதி வியாபாரிகள் புலம்புகின்றனர். அருப்புக்கோட்டை பூக்கடை பஜார் நகரின் முக்கிய பகுதி. இதன் வழியாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து செல்கின்றனர். இந்தப் பகுதியில் உள்ள பல சரக்கு கடைகள், டீக்கடைகள், பூக்கடைகளுக்கு மக்கள் வருவர். பஜாரின் இரு புறமும் உள்ள பிரதான வாறுகால் அடைபட்டும், ஆக்கிரமிப்பாலும் சிறிய மழை பெய்தாலும் மழைநீர் வெளியேற வழியியின்றி பஜார் முழுவதும் தேங்கிவிடும். கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து விடும். பல ஆண்டுகளாக இந்த பிரச்னைக்கு முடிவு கட்டும் விதமாக நகராட்சி மூலம் 50 லட்சத்திற்கும் மேல் செலவு செய்து வாறுகாலை புதியதாக அமைக்கும் பணி 10 மாதங்களுக்கு முன் நடந்தது. முறையாக, தரமாக கட்டாததால் மீண்டும் மழை பெய்தால் பஜாரில் தண்ணீர் தேங்குகிறது. நேற்று மாலை 4:20 மணிக்கு பெய்த மழையில் பஜார் வெள்ளத்தில் மிதந்தது. கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. என்றைக்கு தான் இந்த நிலைமை சரியாகும் என வியாபாரிகள் புலம்புகின்றனர்.