தனிநபர் கழிப்பறைக்கு மானியம் வழங்காததால் தவிப்பு
காரியாபட்டி: தனிநபர் கழிப்பறைக்கு மானியம் வழங்காததால் பயனாளிகள் தவித்து வருவது, திருமண மண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராதது, புறவழிச் சாலைக்கு அளவீடு செய்யும் பணிக்கு  மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.மல்லாங்கிணர் பேரூராட்சியில் காலை, மாலை நேரங்களில் பஜாரை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். புறவழிச்சாலை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது.இதையடுத்து அளவீடு செய்யும் பணி, 3  மாதங்களாக  நடைபெற்று வருகிறது. 4. 5 கி, மீ.,  தூரம் புறவழிச் சாலை அமைய உள்ளது. இதற்கு ரூ. 16 கோடி  நிதி தேவைப்படுவதாக அறியப்பட்டது. இந்நிலையில் அளவீடு பணி முடிவடைந்து அடையாள கற்கள் நடப்பட்டது. விரைந்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்க வேண்டும்.பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடுகளில் தனிநபர் கழிப்பறை  கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு கொடுக்க வேண்டிய மானியம் கொடுக்கப்படவில்லை. இதனால் பெரும்பாலானவர்கள் பணியை முழுமையாக முடிக்க முடியாமல் பாதியில் விட்டனர். தற்போது சேதமடைந்து வீணாகி வருகிறது. மானியம் கிடைக்குமா என்கிற சந்தேகம்  எழுந்துள்ளது. இங்குள்ள திருமண மண்டபம் மராமத்து பணிகள்  செய்யப்பட்டு, நல்ல நிலையில் உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு வராதது, வருத்தம் அளிப்பதாக தெரிவித்தனர்.  விரைந்து நிதி ஒதுக்கப்படுமா
பாண்டி, தனியார் ஊழியர்: மல்லாங்கிணரில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருவதால் புறவழிச் சாலை அமைக்க வேண்டி நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ரூ.16 கோடி செலவாகும் என அறியப்பட்டது. முதற்கட்டமாக  வரலொட்டியிலிருந்து பிரிந்து  முடியனூர் விலக்கு வரை 4.5 கி.மீ., தூரத்திற்கு அளவீடு செய்யும் பணி 3  மாதங்களாக நடைபெற்று,  முடிந்தது.  அதோடு நின்று விடாமல், ரோடு அமைக்க, விரைந்து நிதி ஒதுக்கி பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயன்பாட்டிற்கு கொண்டு வாங்க
மகேந்திரன், வக்கீல்: பேரூராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் மராமத்து செய்து  நல்ல நிலையில் உள்ளது. ஏழை எளிய மக்கள் குறைந்த செலவில் வாடகைக்கு எடுத்து விசேஷ நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். தற்போது,  விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வழங்குவதை நிர்வாகம் நிறுத்தி உள்ளது. திருமண மண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவந்து, விசேஷம் வைப்பவர்களுக்கு   வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மானியத்திற்காக காத்திருப்பு
ஆற்றல் அரசு, தனியார் ஊழியர்: ஒவ்வொரு வீட்டிற்கும் தனிநபர் கழிப்பறை கட்ட அரசு மானியத்துடன் திட்டத்தை செயல்படுத்தியது. பெரும்பாலானவர்கள் கழிப்பறை கட்டினர். மானியம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பல ஆண்டுகளாகியும் இதுவரை கிடைக்கவில்லை.இனியும் கிடைக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது சேதம் அடைந்து பயன்பாடு இன்றி கிடக்கிறது. மராமத்து செய்ய நிதி தேவைப்படுவதால் மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.