உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருத்தங்கலில் இடிந்த கலையரங்கில் செயல்படும் அரசு தொடக்க பள்ளி

திருத்தங்கலில் இடிந்த கலையரங்கில் செயல்படும் அரசு தொடக்க பள்ளி

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியில் துவங்கப்பட்ட நாளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக சேதம் அடைந்த கலையரங்கில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்குவதால் ஆசிரியர்கள், மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியில் 2021 ல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இங்கு இரண்டு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். 20 மாணவர்கள் வரை படிக்கின்றனர். இப்பள்ளி துவங்கப்பட்ட நாளிலிருந்து தனியாக கட்டடம் இல்லை. எனவே அதே பகுதியில் உள்ள கலையரங்கில் இயங்கி வருகின்றது. 2012ல் கட்டப்பட்ட இந்த கலையரங்கத்தின் முன் பகுதி தற்போது சேதம் அடைந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் வேறு வழியின்றி பள்ளி தொடர்ந்து இங்கேயே இயங்கி வருகின்றது. மிகச்சிறிய ஹாலில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கும் ஆசிரியர்கள் பாடம் எடுக்கின்றனர். இட நெருக்கடியாலும் பெரிதும் அவதிப்படுகின்றனர். இங்கு குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். கலையரங்கமும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் தினமும் அச்சத்திலேயே வருகின்றனர். எனவே பள்ளிக்கு என தனியாக கட்டடம் கட்ட வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ