உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்டத்தில் நாள் முழுவதும் கொட்டித் தீர்த்த மழை

மாவட்டத்தில் நாள் முழுவதும் கொட்டித் தீர்த்த மழை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு துவங்கி நேற்று மாலை வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் திண்டாடினர். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் வெயில், மாலையில் மழை பெய்து வந்தது. தீபாவளியான நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. ஆனால் மாலை, இரவு துவங்கிநேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. சாரல் மழையாக தொடர்ந்து பெய்ததால் வீடுகளை விட்டு மக்கள் யாரும் வெளியே செல்ல பரிதவித்தனர். விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சாத்துாரில் சாரல் மழை பெய்தது. அருப்புக்கோட்டையில் 2 நாட்களுக்கு முன்பு அதிகாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் ரோடுகள் வெள்ளக்காடாக மாறியது. பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பெய்த தொடர் மழையால் நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரோடுகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் சேறும் சகதியுமாக இருப்பதால் மக்களால் நடந்து செல்ல முடியவில்லை. வாறுகால், ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நகராட்சியின் தற்காலிக பஸ் ஸ்டாண்டும் சகதியாக உள்ளதால் நிற்க முடியாமல் அவதிப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்துார் பிள்ளையார்குளம் அரசு கலைக் கல்லூரி பின்புறம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்ட இடத்தில் அப்பகுதி மக்கள் தகர செட் போட்டு வசித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக குடியிருப்பில் மழைநீர் தேங்கி மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வெம்பக்கோட்டை பகுதியில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் அணைக்கு தண்ணீர் வந்து நீர் மட்டம் 19 அடியாக உயர்ந்தது. கடந்த மழை சீசனில் அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. பிப். ல் அணையில் 20 அடி உயரம் வரை தண்ணீர் இருந்த நிலையில் ஷட்டர் பழுதால் தண்ணீர் வெளியேறி ஜூனில் 15 அடியாக குறைந்தது. ஷட்டர் பழுதால் தொடர்ந்து தண்ணீர் வெளியேறிய நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு நீர்மட்டம் 9.5 அடி தான் இருந்தது. தற்போது பெய்துள்ள மழை விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. * ராஜபாளையம் அருகே நீர்வரத்து அதிகரித்ததால் சமுசிகாபுரம் மேல இலுப்பிலான் குளம் கண்மாய் உடைந்து தண்ணீர் வெளியேறும் நிலையில் மூன்று ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் சீரமைக்காததால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை