மேலும் செய்திகள்
ஊராட்சிகளில் முறைகேடு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
01-Jun-2025
மதுரை: சிவகாசி அருகே சுப்பிரமணியபுரத்தில் கழிவு நீர் வடிகால் ஆக்கிரமிப்பை அகற்ற தாக்கலான வழக்கில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சுப்பிரமணியபுரம் ராமர் தாக்கல் செய்த மனு:சுப்பிரமணியபுரம் தெற்குத் தெருவில் ஊராட்சி நிர்வாகத்தால் கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டது. இதை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். கழிவு நீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகாலை முறையாக பராமரிக்க கலெக்டர், சிவகாசி ஆர்.டி.ஓ., தாசில்தார், வெம்பகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர், சுப்பிரமணியபுரம் ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு:சந்தேகத்திற்கு இடமின்றி, மனுதாரரின் புகார் தீவிரமானது. வடிகால் பாதையை சுத்தம் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், கழிவுநீர் உரிய இடத்திற்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். மனுதாரரின் கடும் புகாரை கருத்தில் கொண்டு கலெக்டர், ஆர்.டி.ஓ.,தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும். சீரற்ற கழிவுநீர் ஓட்டத்தை சரிசெய்து, தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறைவேற்றாத பட்சத்தில், மனுதாரர் இந்நீதிமன்றத்தை அணுக உரிமை உண்டு. அத்தகைய சூழலில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயலற்ற தன்மையை இந்நீதிமன்றம் தீவிரமாகக் கருதும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
01-Jun-2025