நதிக்குடி மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் அழிக்கப்படும் மரங்கள் தடுக்க எதிர்பார்ப்பு
சிவகாசி : சிவகாசி அருகே நதிக்குடியில் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் உள்ள வன பாதுகாப்பு காடுகள் அழிக்கப்படுவதால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடியில் மேய்ச்சல் புறம்போக்கு நிலம் உள்ளது. இங்கு வேலம், வேம்பு ,வாகை உள்ளிட்ட மரங்கள் காணப்படுகிறது. தவிர புற்கள் அதிகமாக இருப்பதால் இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்கும் பயன் படுகிறது. இந்நிலையில் இந்த மரங்களை சமூகவிரோதிகள் இரவோடு இரவாக அறுத்து கடத்துகின்றனர். காப்புக்காடுகள் வளம் குறைந்து வருகிறது. மேலும் புற்களும் அழிக்கப்படுவதால் கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்கும் வழியில்லை. எனவே அதிகாரிகள் மரங்களை வெட்டும் சமூகவிரோதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இப்பகுதியினர் கூறுகையில், இங்குள்ள மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் சமூக விரோதிகள் அவ்வப்போது மணல் திருட்டில் ஈடுபட்டு மண்வளத்தை அழித்தனர். தற்போது மரங்களையும் அழித்து இயற்கை வளமும் பாழாகிறது. எனவே மரங்களை வெட்டுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.