போலீஸ் ஸ்டேஷன்களில் பறிமுதல் வாகனங்கள் வீணாகும் நிலை
ராஜபாளையம்: ராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன்களில் பறிமுதல் செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் பாதுகாப்பின்றி வெயிலிலும் மழையிலும் நனைந்து வீணாகி வருகிறது.ராஜபாளையம் சரகத்திற்கு உட்பட்ட வடக்கு, தெற்கு, மகளிர், போக்குவரத்து மற்றும் உட்கோட்ட ஸ்டேஷன்களான தளவாய்புரம், சேத்துார் என உள்ள ஸ்டேஷன்களில் ஒவ்வொன்றிலும் புதிய வாகனங்கள் முதல் உரிமை கோராத வண்டிகள் நுாற்றுக்கணக்கில் வீணாகி வருகின்றன.போலீஸ் ஸ்டேஷன்களில் விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஆட்டோ, கார், வேன், லாரி டூ வீலர் உள்ளிட்ட வாகனங்கள் இது தவிர போதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாத நபர்களிடம் பறிமுதல் செய்து அபராதம் விதித்த வாகனங்கள், மண் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர்கள், மாட்டு வண்டிகள் என ஏராளமாக உள்ளன. நீதிமன்ற வழக்கு தொடர்புடைய வாகனங்கள், அபராதம் விதித்து கைப்பற்றப்பட்டு போலீஸ் ஸ்டேஷன்களில் இடம் இன்றி சுற்றுப்பகுதிகளில் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் உரிய பாதுகாப்பு இன்றியும் வாகனங்கள் வீணாகி வருகிறது.அபராதம் செலுத்தியவர்களிடம் விரைந்து ஒப்படைக்கவும், நீதிமன்ற வழக்கு தொடர்புடைய வாகனங்களை முறையாக பாதுகாக்கவும் மற்ற கேட்பாரற்ற வாகனங்களை விதிமுறைகளின் படி ஏலம் விடவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.