காரியாபட்டியில் நெருக்கடி அதிகரிப்பு; சமாளிக்க டிராபிக் போலீசார் தேவை
காரியாபட்டி : காரியாபட்டியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த டிராபிக் போலீசார் இல்லாததால் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக செல்வதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனை தடுக்க டிராபிக் போலீசார் நியமிக்க வேண்டும்.காரியாபட்டி பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் பணி நடைபெற்று வருவதால் பஸ்களை முக்கு ரோட்டில் நிறுத்துகின்றனர். ரோட்டோரத்தில் வாறுகால் கட்டும் பணி நடைபெறுவதால் ஒரு வழி பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. காய்கறி கடைகள், கடைக்காரர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் டூவீலர்கள், கார், ஆட்டோ, லோடு வேன் உள்ளிட்ட வாகனங்களை ரோட்டில் நிறுத்தி இடையூறு ஏற்படுத்துகின்றனர். பஸ்கள், கனரக வாகனங்கள் எளிதில் செல்ல முடியவில்லை. முக்கு ரோட்டில் இருந்து பஜாரை கடந்து செல்ல படாதபாடு படுகின்றனர். அதேபோல் முக்கு ரோட்டிலிருந்து கள்ளிக்குடி ரோடு பைபாஸ் வரை கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் பொறுமையாக நின்று செல்ல மனமில்லாமல் குறுக்கும், நெடுக்குமாக முந்தி செல்ல முற்படுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த டிராபிக் போலீசார் கிடையாது. எனவே விபத்தை தடுக்க டிராபிக் போலீசாரை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.