l மழை, சீதோஷ்ண நிலையால் காய்ச்சல் வாய்ப்பு தாராளம்; l மக்கள் விழிப்புணர்வு செயல்பாடும் அவசியம்
மாவட்டத்தில், அவ்வப்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ஆங்காங்கே பெய்யும் கனமழையால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. குளிர்ந்த சீதோஷ்ண நிலை உள்ளது. இது போன்ற சூழ்நிலையில், மனித உடல் அதற்கு ஏற்ப மாறும் போது, நோய் உண்டாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. அப்படியே விட்டு விடாமல் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கொசுக்களால் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா காய்ச்சல் பரவும் ஆபத்து உள்ளது. சுற்றுப்புறத்தில் மழை நீர் தேங்குவதால் வைரஸ் காய்ச்சலும் பரவுகின்றன. மழைநீர் தேங்கினால் உள்ளாட்சி அமைப்புகளிடம் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். டயர்கள், பழைய டப்பாக்களில் மழை நீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குளிர்சாதன பெட்டியில் தேங்கும் நீரை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும். கொசு வளர வாய்ப்பு இல்லாமல் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இது அனைத்தும் மழைக் காலங்களில் ஏற்படுவது எதார்த்தமானது தான். அரசு இதனை தடுக்க முயற்சி எடுக்கும் என நினைக்காமல் நமக்கு நாமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பாதுகாத்துக் கொள்ள முன் வரவேண்டும்.வீட்டில் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைப்பதுடன், தேவையில்லாத குப்பைகளை அப்புறப்படுத்தி துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளும் மக்களின் புகாருக்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசு மருந்து தெளிக்க வேண்டும். தேங்கும் மழை நீரை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் மழை நீரில் எண்ணெய் பந்துகளை வீச, சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடம் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தி, டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.