l சிறுவர்களை நீர்நிலைகள் பக்கம் விடாது தடுப்பது அவசியம்; l பெற்றோர்கள் கவனமுடன் செயல்பட எதிர்பார்ப்பு
மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ஆங்காங்கே இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. குளம், குட்டை, ஊருணி, ஆறுகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. பெரும்பாலான நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் சீமைக் கருவேல மரங்கள், நாணல்கள், இதர செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால், பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது.இந்நிலையில் வார விடுமுறை, பண்டிகை விடுமுறை நாட்கள் என விடுமுறைக்கு வீட்டில் இருக்கும் சிறுவர்கள் விளையாட்டில் ஆர்வமாக இருப்பர். சிலர் நீர்நிலைகளுக்கு சென்று குதித்து விளையாடுவர். பெரும்பாலான சிறுவர்களுக்கு நீச்சல் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.சிறுவர்களுக்கு நீச்சல் கற்று தருவதற்கான சூழ்நிலையை பெற்றோர்கள் ஏற்படுத்துவது கிடையாது. இது ஒரு புறம் இருக்க, நீர்நிலைகளில் படர்ந்து இருக்கும் செடி, கொடிகளுக்குள் விளையாட செல்லும் சிறுவர்கள் சிக்கி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.அது மட்டுமல்ல ரோடு பணிக்காக ஆங்காங்கே உள்ள கண்மாய், ஊருணிகளில் அதிக ஆழம் வரை கிராவல் மண் எடுத்து பள்ளங்களாக உள்ளன. இதில் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுவர்கள் மூழ்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் நரிக்குடி, காரியாபட்டி, அருப்புக் கோட்டை உள்ளிட்ட பகுதியில் சிறுவர்கள் பலர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பல நடந்துள்ளது.இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க நீர் நிலைகள் பக்கம் சிறுவர்களை செல்ல விடாமல் தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பாதுகாப்பாக இருக்க சிறுவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்கள் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.நீர்நிலைகள் நிரம்பி வருவதால், குளிப்பதற்கு, வேடிக்கை பார்ப்பதற்கு சிறுவர்களை அனுப்ப வேண்டாம். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் உள்ள நீர்வீழ்ச்சிகள், ஓடைகளில் காற்றாற்று வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.