தமனி, நரம்பு இணைப்பு டாக்டர்கள் இல்லை புதிய மருத்துவக்கல்லுாரிகளில் தவிப்பு
விருதுநகர்:புதிய மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கு தமனி, நரம்பு இணைப்பு பொருத்தும் வசதி, நிபுணர்கள் இல்லை. தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்ட 11 மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டயாலிசிஸ் இயந்திரங்கள் மூலம் 24 மணி நேரமும் ரத்தம் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.இவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் போது முழங்கையில் தமனிகள், நரம்புகளுக்கான இணைப்பு பொருத்த வேண்டும். தமனி ரத்தத்தை வெளியில் எடுத்து செல்லும் பணியும், நரம்பு ரத்தத்தை உள்ளே கொண்டு செல்லும் பணியும் செய்கிறது. இந்த தமனி, நரம்பு இரண்டையும் இணைப்பது தான் ஆர்ட்டிரியோவினஸ் பிஸ்டுலா.சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழங்கையில் இந்த இணைப்பு செய்யப்பட்டால் மட்டுமே டயாலிசிஸ் செய்ய முடியும். இந்த வசதி புதிய மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் இல்லை.இதற்காக மதுரை, திருநெல்வேலி, கோவை, சென்னை உள்ளிட்ட பெரிய மருத்துவமனைகளுக்கு சென்று ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணரின் நேரம் பெற்று இணைப்பு பொருத்த காத்திருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.சிறுநீரக கோளாறு பாதிப்புகள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் அதற்கு தகுந்தவாறு அரசு மருத்துவமனைகளில் வசதிகள், நிபுணர்கள் நியமிக்கப்பட வேண்டும்.