உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அதிக வரத்தால் மா அறுவடை நிறுத்தி வைப்பு-- விலை குறைவால் விவசாயிகள் வேதனை

அதிக வரத்தால் மா அறுவடை நிறுத்தி வைப்பு-- விலை குறைவால் விவசாயிகள் வேதனை

ராஜபாளையம்: மாம்பழ சீசன் உச்சத்தை எட்டி உள்ள நிலையில் தொடர் சாரல் மழை பலத்த காற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு அதிக விலை குறைவிற்கு காரணமாகும் என்பதால் மாங்காய் ஏல மார்க்கெட் மேலும் ஒரு நாள் தற்காலிக விடுப்பு விடப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய சேத்துார், தேவதானம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, கான்சாபுரம், உள்ளிட்ட ராஜபாளையம் சுற்றுப்பகுதிகளில் மா உற்பத்தி அதிகம். இப்பகுதிகளில் விளையும் சப்பட்டை, பஞ்சவர்ணம், பாலாமணி, இமாம்பசந்த் போன்ற ரகங்களுக்கு தென்மாவட்டம் உட்பட கேரள மாநில வியாபாரிகள் இடையே நல்ல வரவேற்பு உண்டு.இங்கு விளையும் மாங்காய்களுக்கு முக்கிய சந்தையாக ராஜபாளையம் இருந்து வருகிறது. தற்போது சீசன் அதிகரித்து ராஜபாளையம் சந்தைக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 200 குவிண்டால் வரை வரத்துள்ள நிலையில் வெளி மாநில வியாபாரிகளிடையே கேட்பு குறைந்ததால் தகுந்த விலை இல்லை. இதனால் மார்க்கெட் ஏலத்தை ஒரு நாள் நிறுத்தி வைத்து விலை கூட வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் வருடத்தில் மாங்காய் சீசன் என்பது பங்குனி மாதம் முன்பு தொடங்கி சித்திரை, வைகாசி, ஆனி மாதம் வரை நீடிக்கும்.தற்போது சீசன் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டிரேக்கள் வரை வரத்து உள்ளது. ஆனால் விலையோ மொத்த விலையில் சப்பட்டை, பஞ்சவர்ணம், பாலாமணி ரூ.20 முதல் 40 வரையும், இமாம்பசந்த் ரூ.40 முதல் 75 வரை ரகம் வாரியாக ஏலம் போகிறது. கடந்த ஒரு வாரமாக தொடர் சாரல் மழை, பலத்த காற்றினால் காய்களில் கருப்படித்து நிறம் மாறி விலை குறைவான நிலை காணப்படுகிறது. ஏற்கனவே இரண்டு நாள் ஏல விடுமுறை உள்ள நிலையில் அதிக வரத்தினால் சனிக்கிழமையும் (நேற்று) ஏலத்தை நிறுத்தி விலை குறைவை சரி செய்ய முயற்சிக்கிறோம். இதனால் விவசாயிகளோடு வியாபாரிகளான நாங்களும் வேதனையில் உள்ளோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி