| ADDED : நவ 16, 2025 03:54 AM
அருப்புக்கோட்டை: கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் டென்ஷன் ஆகாமல் மனதை அமைதியாக வைத்து க்கொள்ள வேண்டும், என அருப்புக்கோட்டை அருகே நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசினார். அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி பி.பி.வி., சாலா பள்ளியில் நடந்த மருத்துவ முகாமிற்கு கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெயசிங், மருத்துவத் துறை இணை இயக்குனர் காளிராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுகாதார அலுவலர் யசோதா மணி வரவேற்றார். முகாமில் கலந்து கொண்டு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், மக்கள் நலனில் அக்கறை கொண்டு நாட்டில் நலம் காக்கும் மருத்துவ முகாம்களை முதல்வர் நடத்த அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைகளைத் தேடிச் செல்லும் காலம் போய் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவத்துறை அலுவலர்கள் மக்களை தேடிச் சென்று அவர்களை பரிசோதனை செய்து உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்குகின்றனர். கர்ப்பிணி தாய்மார்கள் இந்த காலகட்டத்தில் டென்ஷன் இல்லாமல் தங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அமைதியாவும், சத்தான உணவுகளையும் டாக்டரின் அறிவுறுத்தலின்படி எடுத்துக் கொண்டால் சுகமான பிரசவம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் தங்களை வலிகளை பொறுத்துக் கொண்டு கூடிய வரை சுகப்பிரசவத்திற்கு தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும். சிசேரியனை தவிர்க்க வேண்டும் என, அறிவுரை வழங்கினார். உடன் பல்வேறு துறை அதிகாரிகள், மருத்துவ குழுவினர், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.