இருளில் நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: அச்சத்தில் நோயாளிகள்
நரிக்குடி : நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் சரி வர எரியாததால் இருளில் மூழ்கி கிடக்கிறது. விஷப் பூச்சிகளின் நடமாட்டம் இருப்பதால் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர். நரிக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. சுற்றி உள்ள 100 க்கு மேற்பட்ட கிராமத்தினர் காய்ச்சல், தலைவலி, பிரசவம், விபத்துக்கான முதலுதவி சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வருகின்றனர். மற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை காட்டிலும், இங்கு பிரசவத்திற்கு ஏராளமான கர்ப்பிணி பெண்கள் வருகின்றனர். இந்நிலையில் 6 மாதங்களாக இரவு நேரங்களில் வளாகத்தில் சரிவர மின் விளக்குகள் எரிவதில்லை. எப்போதும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. அறியாமையில் மிதிக்க நேரிடும் போது அலறி அடித்து ஓடுகின்றனர். ஆபத்தான சூழ்நிலை இருப்பது குறித்து பலமுறை புகார் தெரிவிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரசவ வார்டும் இருள் சூழ்ந்து இருப்பதால் குழந்தைகளை வைத்துக்கொண்டு தாய்மார்கள் படாத பாடு படுகின்றனர். இரவு நேரங்களில் திருடர்களின் நடமாட்டம் உள்ளது. அவ்வப்போது பிரசவத்திற்கு வரும் பெண்களிடமே பணம், நகை திருட்டில் ஈடுபடுகின்றனர். ஏற்கனவே பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளதால், நோயாளிகள், கர்ப்பிணிகள் அச்சத்தில் உள்ளனர். மின்விளக்குகள் பொருத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.