தோட்டக்கலை பயிர்களில் இயற்கை சாகுபடி அறிவுரை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களில் இயற்கை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சுபாவாசுகி கூறினார். அவரது செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் 28 ஆயிரம் எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பயிர்களில் பூச்சிக் கொல்லிகள், ரசாயன உரங்களின் நச்சு படிந்து விளைபொருட்களை நச்சுத்தன்மை உடையதாக மாறச் செய்கிறது. இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உரங்களையும், தக்கைப்பூண்டு, சணப்பை , மண்புழு உரம், மக்கிய தொழு உரம் ஆகியவற்றையும் உரமாக பயன்படுத்தலாம். சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றை விதை நேர்த்தியின் போதும், தோட்டங்களில் நேரடியாகவும் உபயோகப்படுத்தலாம். பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், தசகாவ்யா, தேமோர்க் கரைசல் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இயற்கை பூச்சி விரட்டிகள், மஞ்சள் ஒட்டுப் பொறி, விளக்குப் பொறி, இனக்கவர்ச்சி பொறி ஆகியவற்றை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும், என்றார்.