அரசு மகப்பேறு மருத்துவமனையில் இரவு பாதுகாப்புக்கு போலீசார் இல்லை
விருதுநகர்: விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இரவில் போலீசார் யாரும் பாதுகாப்புக்கு இல்லாமல் இருப்பதால் வளாகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை உண்டாகியுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை, மகப்பேறு சிகிச்சை பிரிவில் காலை, மாலை, இரவு நேரங்களில் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அரசு மருத்துவமனையில் காலை முதல் இரவு வரை பாதுகாப்பு பணிக்கு போலீசார் உள்ளனர். ஆனால் அரசு மகப்பேறு மருத்துவமனையில் காலையில் மட்டுமே ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இரவில் போலீசார் யாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை. அரசு மருத்துவக்கல்லுாரியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மாறியதால் 132 பேர் வேலை இழந்து விட்டனர். இந்நிலையில் பாதுகாப்பு பணிக்கு ஊழியர்கள் பற்றாக்குறையாக இருக்கும் தற்போதைய நிலைமையில் மகப்பேறு பிரிவுக்கு இரவில் போலீசார் பாதுகாப்பு இல்லாததால் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. நேற்று முன்தினம் இரவில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்கும் போதே நுரையீரல் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு கத்தியுடன் மர்மநபர்கள் 4 பேர் வந்து சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது போன்ற பதற்றமான சூழ்நிலை இருந்தும் மகப்பேறு பிரிவுக்கு இரவில் பாதுகாப்பு பணிக்கு போலீசாரை நியமிக்காமல் இருக்கும் மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் மீது மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்கள், டாக்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். மகப்பேறு பிரிவில் ஏதேனும் அசம்பாவதிம் நடந்தால் போலீசாரே பொறுப்பு ஏற்க வேண்டும் என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். எனவே விருதுநகர் அரசு மகப்பேறு பிரிவுக்கு இரவிலும் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் நடவடிக்கையை மாவட்ட போலீஸ் நிர்வாகம் உடனடியாக எடுக்க வேண்டும்.