பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு கேமரா இல்லை தொடரும் திருட்டு சம்பவங்களால் பயணிகள் அச்சம்
சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்டில் அடிக்கடி சிறு சிறு திருட்டு, குற்ற சம்பவங்கள் நடப்பதால் அதனை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் 200க்கும் மேற்பட்ட முறை அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. அருகில் உள்ள கிராமங்கள் தவிர சாத்துார், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து பல்வேறு பணி நிமித்தமாக தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். அதே போல் இங்கிருந்தும் பல்வேறு நகருக்கு மக்கள் சென்று வருகின்றனர். எனவே பஸ் ஸ்டாண்டில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்துார் பஸ்கள் வெளியே செல்லும் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.இதில் இரு கண்காணிப்பு கேமராக்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது பஸ் ஸ்டாண்டினை முழுமையாக கண்காணிக்க வழி இல்லை. இதனால் பஸ் ஸ்டாண்டுக்குள் அடிக்கடி சிறுசிறு திருட்டு சம்பவங்கள், குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.ஆனால் திருட்டில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் சமூக விரோதிகள் சிலர் இரவானால் மது அருந்துகின்றனர். இதனால் பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் பஸ் ஸ்டாண்டில் உடனடியாக கண்காணிப்பு கேமரா அமைப்பதோடு போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.