அரசு டவுன் பஸ்களில் முதலுதவிபெட்டகங்கள், மருந்துகள் கையிருப்பு அதிகாரிகள் ஆய்வு தேவை
விருதுநகர்: அரசு டவுன் பஸ்களில் முதலுதவி பெட்டகங்கள், அதில் மருந்துகள் கையிருப்பு இருப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 அரசு போக்குவரத்து பணிமனைகளில் மொத்தம் 462 பஸ்கள் உள்ளது. இதில் வரையறுக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை 418 ஆக உள்ளது. இங்குள்ள மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 2430.தினசரி நிர்ணயிக்கப்பட்ட இயக்க துாரம் 1.95 லட்சம் கி.மீ., மாதத்திற்கு 58.50 லட்சம் கி.மீ., இயக்கம் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் தினசரி 2.01 லட்சம் பயணிகளும், மாதத்திற்கு 60.30 லட்சம் பயணிகள் பயன் பெறுகின்றனர். மேலும் அரசு பஸ்கள் விபத்துக்குள்ளாகும் போதும், அதில் பயணிகளுக்கு அவசர மருத்துவ தேவை ஏற்படும் போது முதலுதவி புரிவதற்காக முதலுதவி பெட்டகங்கள் ஏற்படுத்தப்பட்டது.ஆனால் பெரும்பாலான பஸ்களில் இப்பெட்டகங்கள் இருந்தாலும் சில பஸ்களில் பெட்டகங்கள் இல்லாமல் உள்ளது.இந்த பெட்டகங்களில் மருந்துகள் கையிருப்பில் இருப்பதையும், அதன் காலாவதி தேதிகள் சரியாக உள்ளதையும் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் ஆண்டிற்கு ஒரு முறை வட்டார போக்குவரத்து கழகத்திற்கு பஸ்கள் செல்லும் போது மட்டுமே பெட்டகங்கள் புதுக்கப்பிக்கப்படுகிறது.எனவே பயணிகள் நலன் கருதி அனைத்து டவுன் பஸ்களிலும் முதலுதவி பெட்டகங்கள் இருப்பதையும், அதில் மருந்துகள் இருப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.