சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு
காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் சிப்காட்டுக்கு இடம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு கழுவனச்சேரி பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நேற்று காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக மாநில பொதுச் செயலாளர் அர்ஜுனன், மாநில செயலாளர் ராம முருகன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மலைச்சாமி, விருதுநகர் மாவட்ட தலைவர் ராம் பாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் கனகசபாபதி, ஒன்றிய செயலாளர் கண்ணன், விவசாயிகள் தாலுகா அலுவலகத்தில் தனித்தனியாக மனுகொடுத்தனர்.அதில் இப்பகுதியில் மல்லிகை செடிகள் பயிரிடப்பட்டு வருகிறது. புவிசார் குறியீடு பெற்ற சம்பா மிளகாய், பருத்தி, தென்னை, சோளம் பயிரிடப்பட்டு வருகின்றன. வளங்கள் நிறைந்த நிலங்களில் சிப்காட் தொழில் பேட்டை அமைக்க கூடாது. விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.