உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அடிப்படை வசதிகள் இல்லாத விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் அல்லல்படும் பயணிகள்

அடிப்படை வசதிகள் இல்லாத விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் அல்லல்படும் பயணிகள்

விருதுநகர்: சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிவறை, விரிவான டூவீலர் பார்க்கிங், பயணிகள் அமர்வதற்கான இடவசதி, பாதுகாப்புக்கு சி.சி.டி.வி., கேமராக்கள், உணவகங்கள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஓராண்டை கடந்தும் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் தினமும் பயணிகள் அல்லப்பட்டு சென்று வருகின்றனர். விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் காரணங்களால் செயல்படாமல் முடங்கி கிடந்தது. முந்தைய கலெக்டர் ஜெயசீலன் முயற்சியாலும், இனி வரும் காலங்களில் நகரில் இன்னொரு பஸ் ஸ்டாண்ட் வசதி தேவை ஏற்பட்டதாலும் கடந்தாண்டு ஆக. 21ல் மீண்டும் புது பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இங்கு சுற்றுச்சுவர், சுத்தமான குடிநீர் வசதிகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. பஸ்சிற்காக காத்திருக்கும் மக்கள் தாகம் எடுத்தால் விலை கொடுத்தும் குடிநீரை வாங்கி குடிக்கும் நிலையே தொடர்கிறது. இங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்துார், சிவகாசி, ராஜபாளையம், மதுரை, கோவில்பட்டி, ஈரோடு ஆகிய பகுதிகளுக்கும், பணிக்கு சென்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்கள் தங்களின் டூவீலர்களை புது பஸ் ஸ்டாண்டில் ஓரங்களில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இந்த டூவீலர்கள் மழை, வெயிலில் கிடந்து பாழாகும் நிலை உருவாகியுள்ளது. பயணிகள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு சுகாதாரமான கழிவறைகள் எதுவும் இல்லை. இதனால் பெண் பயணிகள், பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்படுகின்றனர். பயணிகளின் பாதுகாப்புக்கு சி.சி.டி.வி., கேமராக்கள் அமைக்கப்படாததால் இரவில் பஸ்சிற்காக காத்திருக்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. வளாகத்தில் போதிய உணவகங்கள் நகராட்சி, மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படவில்லை. பசியுடன் பயணிக்க சென்று வரும் நிலையே தொடர்கிறது. பஸ்கள் வந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட கான்கீரிட் ரோடு முழுவதும் சேதமாகி பள்ளங்களாக மாறியுள்ளது. புது பஸ் ஸ்டாண்டில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடியே 38 லட்சம் ஒதுக்கப்பட்டு கழிவறை, சுற்றுச்சுவர், டூவீலர் நிறுத்தம் விரிவாக்கம், கட்டடங்கள் பேட்ஜ் பணிகள், வணிக கடைகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இரு மாதங்களை கடந்தும் எவ்வித பணிகளும் இதுவரை துவங்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி