உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாஸ்போர்ட் விண்ணப்பிப்போர் தரகர்களை அணுக வேண்டாம்

பாஸ்போர்ட் விண்ணப்பிப்போர் தரகர்களை அணுக வேண்டாம்

சிவகாசி; ''பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் மக்கள் தரகர்களை அணுகாமல் நேரடியாக அலுவலகத்தில் அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும் ,''என மதுரை பாஸ்போர்ட் மண்டல அலுவலர் வசந்தன் அறிவுறுத்தினார். சிவகாசி சப் கலெக்டர் அலுவலகத்தில் மொபைல் பாஸ்போர்ட் சேவை முகாம் நடந்தது. இதில் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் துவக்கி வைத்தார். நிர்வாக அலுவலர் சீனிவாசன் விண்ணப்பதாரர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் வசந்தன் கூறியதாவது:. மதுரை மண்டலத்தில் ஜூன் மாதம் மொபைல் சேவை தொடங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக சிவகாசியில் இரு நாட்கள் இச் சேவை நடந்து வருகிறது. மக்களை தேடி சென்று பாஸ்போர்ட் சேவை வழங்குவதே அரசின் நோக்கம். மக்கள் பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இந்த முகாமுக்கு சிவகாசியில் நல்ல வரவேற்பு உள்ளது. தேவைப்பட்டால் தொடர்ந்து இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படும். மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் 2 பாஸ்போர்ட் சேவை அலுவலகங்களும், 8 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. ஒரு மக்களவை தொகுதிக்கு ஒரு அலுவலகம் உள்ளது. அலுவலகம் இல்லாத இடங்களுக்கு மொபைல் பாஸ்போர்ட் வாகனம் மூலம் சேவை வழங்கி வருகிறோம். மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் கடந்த ஆண்டு 2.80 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 3 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். மதுரை மண்டலத்தில் மாதம் சராசரியாக 22 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் தரகர்களை அணுகாமல், பாஸ்போர்ட் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும். பாஸ்போர்ட் வழங்க வேண்டியது எங்கள் கடமை. ஆன்லைனில் விண்ணப்பித்தால் பாஸ்போர்ட் வீடு தேடி வரும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ