ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆயுள் சான்றிதழ் இணையத்தில் பதிவேற்றவும்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 20 அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆயுள் சான்றிதழை இணையம் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியம் உட்பட 20 அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டு தோறும் ஏப்ரலில் ஆயுள் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.இவர்களின் சிரமத்தை போக்குவதற்காக ஏப். 9 முதல் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களின் tnuwwb.tn.gov.inஎன்ற இணையத்தில் ஆயுள் சான்று சமர்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் மூலம் ஏற்கனவே மாதாந்திர ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆதார் எண், குடும்ப அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, வங்கி கணக்கு எண், புகைப்படம் ஆகியவற்றை இணையதளம் மூலமாக ஆயுள் சான்றிதழில் சமர்பிக்க வேண்டும். மேலும் ஓய்வூதிய விண்ணப்ப எண், தொழிலாளர் நல வாரிய பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணையினை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.ஆயுள் சான்று அளிக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு மட்டுமே தொடர்ந்து ஓய்வூதியம் அனுமதிக்கப்படும் என்பதால் ஓய்வூதியதாரர்கள் உடனடியாக இணையம் மூலமாக ஆயுள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.