கோடை விடுமுறை சிறப்பு அந்தியோதயா ரயில்கள் மக்கள் எதிர்பார்ப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்.,15 முதல் ஜூலை 15 வரை 3 மாதங்களுக்கு சென்னையில் இருந்து நாகர்கோவில், செங்கோட்டை, ராமேஸ்வரம், கோவை போன்ற நகரங்களுக்கு சிறப்பு அந்தியோதயா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையில் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் பள்ளித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கும் போது சொந்த ஊர்களுக்கு வந்து உறவினர்கள் வீடுகளில் தங்கிச் செல்வது வழக்கம்.இதற்காக சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு இயங்கும் வைகை, குருவாயூர், பாண்டியன், நெல்லை, பொதிகை, சிலம்பு, கன்னியாகுமரி, முத்து நகர் உட்பட 30க்கு மேற்பட்ட ரயில்களில் தங்கள் பயணங்களை மேற்கொள்வர்.ஏப்., 15க்குள் மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வுகளும், ஏப்.,24ல் அனைத்து வகுப்பு தேர்வுகளும் முடிவடைகிறது. கோடை விடுமுறைக்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல மக்கள் தயாராகி வருகின்றனர்.எப்போதுமே தென் மாவட்ட ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் நிலையே இருந்து வரும் நிலையில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் 100 பேர் பயணிக்க வேண்டிய நிலையில் 200 பேர் பயணிக்கின்றனர். இதில் கோடை விடுமுறை நாட்களில் கூடுதலாக ஒரு மடங்கு மக்கள் பயணிப்பர்.இந்நிலையில் ஏப்.,15 முதல் ஜூலை 15 வரை தினமும் இரவு 8:00 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8:00 மணிக்குள் சென்றடையுமாறு நாகர்கோயில், செங்கோட்டை, ராமேஸ்வரம், திண்டுக்கல்- -பழநி- -பொள்ளாச்சி வழியாக கோவை, வேலுார்-- சேலம்-- ஈரோடு- -திருப்பூர் வழியாக கோவைக்கு சிறப்பு அந்தியோதயா ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் இயக்க வேண்டும்.இதன் மூலம் குறைந்த பயண கட்டணத்தில் மக்கள் சொந்த ஊருக்கு சிரமமின்றி சென்று சென்று வருவர்.