போட்ட சில மாதங்களிலே சேதமடைந்த ரோடால் மக்கள் அவதி; சீரமைக்க எதிர்ப்பார்ப்பு
காரியாபட்டி : காரியாபட்டி பாப்பனம் - பல்லவரேந்தல் ரோடு புதுப்பிக்கப்பட்ட சில மாதங்களிலே சேதமடைந்து வருவதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. காரியாபட்டி பாப்பனம் வழியாக பல்லவரேந்தல் 3 கி.மீ., துாரம் உள்ளது. அக்கிராமத்தினர் பல்வேறு தேவைகளுக்காக காரியாபட்டிக்கு வர வேண்டும். பாப்பனம் வழியாக வந்தால் 5 கி.மீ.,தூரம். மெட்டல் ரோடாக, கற்கள் பெயர்ந்து ஆட்கள் கூட நடக்க முடியாத அளவிற்கு படுமோசமாக இருந்தது. வாகனங்கள் வர முடியாத சூழ்நிலை இருந்ததால், முஷ்டக்குறிச்சி வழியாக 12 கி.மீ., துாரம் சுற்றி காரியாபட்டிக்கு சென்று வந்தனர். விவசாய பொருட்கள் வாங்க விவசாயிகள் பல கி.மீ., தூரம் சுற்றிவர வேண்டிய நிலைமை இருந்தது. நேரம், பணம் விரயமானதால் சிரமத்திற்கு ஆளாகினர். பாப்பனம் வழியாக செல்லும் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தினர். இதையடுத்து 6 மாதத்திற்கு முன் தார் ரோடு போடப்பட்டது. காரியாபட்டிக்கு வந்து சென்றனர். விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் தரமில்லாமல் போடப்பட்டதால் சில மாதங்களிலே ஆங்காங்கே சேதமடைந்து தார் கலவை பெயர்ந்து வருகிறது. பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் ரோடு சேதமடைவதற்குள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.