மரியன் ஊருணி கால்வாயை துார்வார மக்கள் கோரிக்கை
சாத்துார்: சாத்துார் மரியன் ஊருணி நீர்வரத்து கால்வாயை துார்வார வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்துார் மரியன் ஊருணி சிதம்பரம் நகர், பெரியார் நகர் தில்லைநகர் காமராஜபுரம் பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.இந்த ஊருணிக்கு படந்தால், அண்ணா நகர் கே.கே. நகர்,சுந்தரலிங்கம் நகர் பகுதியில் இருந்து நீர் வரத்து கால்வாய் உள்ளது. இந்த நீர் வரத்து கால்வாய் நான்கு வழிச்சாலையை கடந்து ஊருணியை வந்தடைகிறது. கடந்த பல வருடங்களாக ஊருணிக்கு நீர்வரத்து வரும் கால்வாய் துார்வாரப்படவில்லை.இதனால் மழைக்காலத்தில் பெருகிவரும் மழை நீரும் முழுவதும் பி.டி.ஓ.காலனியில் உள்ள காலி இடத்தில் தேங்கி வீணாகி வருகிறது. மேலும் நீர் வரத்து கால்வாயில் முள் செடி புதர் போல முளைத்து உள்ளதால் மழை பெய்யும் காலங்களில் இந்த தண்ணீர் திசை திரும்பி அண்ணா நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் நான்கு வழிச்சாலை மேற்கு பக்க சர்வீஸ் ரோடு முழுவதும் மழை நீர் புகுந்து போக்குவரத்திற்கு இடையூறாக மாறுகிறது.இதுபோன்ற தருணங்களில் நகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்ற மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மழைக்காலம் துவங்குவதற்கு முன் நீர் வரத்து கால்வாயை துார்வாரி மழை நீர் முழுவதும் ஊருணியை சென்று அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.