உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மண்பாதை, உவர்ப்பு குடிநீர், சேதமான சுகாதார வளாகம் சிரமத்தில் வத்திராயிருப்பு 1வது வார்டு மக்கள்

மண்பாதை, உவர்ப்பு குடிநீர், சேதமான சுகாதார வளாகம் சிரமத்தில் வத்திராயிருப்பு 1வது வார்டு மக்கள்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு பேரூராட்சி 1வது வார்டில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை, கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் ரோடுகள் மண் பாதையாக இருப்பதால் மழை நேரங்களில் சகதியால் அவதி, உவர்ப்பு தன்மை குடிநீரால் சிரமம், அரசு மருத்துவமனை முன்பு கொட்டப்படும் கழிவுகளால் சுகாதாரக் கேடு, சேதமடைந்த சுகாதார வளாகம் உட்பட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.கூமாபட்டி மெயின் ரோடு, சேனையகுடித்தெரு, காளியம்மன் கோவில் தெரு, பண்டாரக்குடி தெருக்களை கொண்டது இந்த வார்டு. இந்த வார்டில் அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை, கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் ரோடு மண் பாதையாக காணப்படுவதால் மழை நேரங்களில் சகதி ஏற்பட்டு அங்கு பணியாற்றும் ஊழியர்களும், மக்களும் சிரமத்தை சந்திக்கின்றனர்.கூமாபட்டி மெயின் ரோட்டில் அரசு மருத்துவமனை முன்பு கழிவுகள் கொட்டப்பட்டும், செடி, கொடிகள் வளர்ந்தும் சுகாதாரக்கேடு காணப்படுகிறது. மருத்துவமனை வாசலில் உள்ள பயணியர் நிழற்குடையின் கூரையில் செடி, கொடிகள் வளர்ந்து கட்டடத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.பேரூராட்சி சார்பில் சப்ளை செய்யப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் இருப்பதால் குடிநீரை விலை கொடுத்து வாங்குகின்றனர். பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சுகாதார வளாகம் சேதமடைந்துள்ளதால் பயன்படுத்த மக்கள் சிரமப்படுகின்றனர்.

தேவை தாமிரபரணி குடிநீர்

சதுரகிரி, குடியிருப்பாளர்: பேரூராட்சி சார்பில் சப்ளை செய்யப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் உள்ளதால் அதனை பொது பயன்பாட்டுக்கு தான் பயன்படுத்தி வருகிறோம். குடிப்பதற்கு மினரல் வாட்டரை விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. எனவே, தாமிரபரணி குடிநீர் கிடைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவை சுகாதார வளாகம் சீரமைப்பு

பத்ரகாளி, குடியிருப்பாளர்: இந்த வார்டுக்கென ஆண்கள், பெண்களுக்கு சுகாதார வளாகம் இல்லாத நிலையில் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சுகாதார வளாகத்தை தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் காணப்படும் குறைகளை சரி செய்து சீரமைத்து தர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சமுதாயக்கூடம் அவசியம்

விக்னேஷ், குடியிருப்பாளர்: இந்த வார்டில் ஏராளமான வீடுகள் உள்ள நிலையில் அங்கு வசிக்கும் மக்கள் நலனுக்காக சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி