| ADDED : நவ 12, 2024 04:33 AM
சிவகாசி: பட்டாசு வணிகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளிக்கப்பட்டது.தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, பட்டாசு கடை உரிமங்களை புதுப்பிக்க ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இறுதிக்குள் விண்ணப்பம் செய்கிறோம். பெரும்பான்மையான மாவட்டங்களில் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து தீபாவளி சமயத்தில் செப்., அக்., மாதத்தில் வழங்குகின்றனர். இதனால் குறித்த நேரத்தில் பட்டாசு கொள்முதல் செய்ய முடியாமல் வணிகம் தடை படுகிறது. வணிகர்கள் மன உளைச்சல் அடைகிறார்கள். எனவே பட்டாசு வணிகம் தொடர்ந்து சீராக நடைபெற விண்ணப்பம் செய்த 60 நாட்களுக்குள் உரிமம் புதுப்பித்து வழங்க வேண்டும்.பட்டாசு கடைக்கான உரிமம் 5 ஆண்டுகளுக்கு வழங்க வெடிபொருள் சட்டம் 2008 விதி எண் 106 மற்றும் 112 ன் படி வழி உள்ளது. இருப்பினும் பெரும்பான்மையான மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே உரிமம் புதுப்பித்து வழங்குகின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டிய நிலையில் கால விரயமும் மன உளைச்சலும் ஏற்பட்டு பட்டாசு வணிகம் நிலையற்ற தன்மையுடன் இருக்கிறது.எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வருவாய் அலுவலர்கள் வழங்கும் பட்டாசு கடை உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்க ஆவண செய்ய வேண்டும். 2008 ல் உச்சநீதிமன்றம், பட்டாசு வணிகத்தில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை செய்து ஆணை பிறப்பித்துள்ளது. இதனை பின்பற்றாமல் பட்டாசு உரிமம் பெறாத வணிகர்கள், தனி நபர்கள் ஆன்லைன் மூலம் பட்டாசு வர்த்தகம் செய்து வருகிறார்கள்.இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும், உரிமம் பெற்று வணிகம் செய்யும் பட்டாசு வணிகர்களின் வணிகம் பெரும் அளவில் பாதிக்கப்படுகிறது. இதனைத் தடுத்து உரிமம் பெற்ற பட்டாசு வணிகர்கள் நலனை பாதுகாக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.