பதிவு மூப்பின்படி பணி வழங்க மருந்தாளுனர்கள் எதிர்பார்ப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்:தமிழ்நாடு பார்மசி கவுன்சில் பதிவு மூப்பு பட்டியல்படி தமிழகத்தில் காலியாக உள்ள மருந்தாளுனர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென, டிப்ளமோ படித்த மருந்தாளுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் பார்மசி கல்லூரிகளில் டிப்ளமோ பார்மசி படித்து முடித்துவிட்டு ஆண்டுதோறும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் வெளியேறி வருகின்றனர்.2000ம் ஆண்டிற்கு முன்பு வரை டிப்ளமோ பார்மசி படிப்பு என்பது ஓராண்டு கல்லூரி படிப்பு, 93 நாட்கள் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுர்கள் பயிற்சியும் எடுக்க வேண்டும். இவர்கள் தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.அவர்கள் வழங்கும் சான்றிதழ் மூலமே அரசு, தனியார் மருத்துவமனைகளில் மருந்தாளுனர்களாகவும், சொந்தமாக மெடிக்கல் ஸ்டோர் வைப்பதற்கும் தகுதி பெற்றவராகவும் உருவாகின்றனர்.ஆனால் கடந்த பல ஆண்டுகளாக காலியாக உள்ள அரசு பணியிடம் முழு அளவில் நிரப்பப்படவில்லை. பல ஆயிரம் மருந்தாளுனர்கள் தாங்கள் படித்த துறைக்கு சம்பந்தம் இல்லாத பல்வேறு தனியார் துறைகளில் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தற்போது 50 வயது கடந்த நிலையில் மிகவும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி தவித்து வருகின்றனர்.எனவே, தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்த, பட்டியல் மூப்பின்படி இனி வரும் காலங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பினால், சில ஆண்டுகளாவது தங்களுக்கு அரசு பணி கிடைக்குமென கருதுகின்றனர்.இது குறித்து மருந்தாளுநர்கள் சங்க முன்னாள் மாநில தலைவர் கணேச மூர்த்தி கூறுகையில்,தற்போது எம்.ஆர்.பி. மூலம் நியமனம் செய்யப்பட்ட மருந்தாளுனர்களில் அதிகமானோர் பார்மசி கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியவர்கள் தான். இதன் மூலம் 2000 ஆண்டிற்கு முன்பு டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கவில்லை.எனவே, இனிவரும் காலங்களில் தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்து, பதிவு மூப்பு பட்டியல் படி முன்னுரிமை கொடுத்து பணி வழங்கினால், தற்போது 50 வயது கடந்தவர்களுக்கு அரசு பணி பெற்று, சில ஆண்டுகளாவது அரசு பணியாற்றி ஒரு பாதுகாப்பான பொருளாதார வாழ்க்கை சூழல் அவர்களுக்கு உருவாகும். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.