உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கனிமங்கள் திருட்டுக்களை தடுக்க போலீஸ் நடவடிக்கை அவசியம்

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கனிமங்கள் திருட்டுக்களை தடுக்க போலீஸ் நடவடிக்கை அவசியம்

மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார நகரங்களான ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாவில் ஏராளமான ஹெக்டேர் பரப்பளவில் விளைநிலங்கள் உள்ளது. இப்பகுதியில் அதிகளவில் நல்ல தரமான மண் , மணல்கள் உள்ளது. இதனால் மலையடிவாரத்தில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மண், மணல் எடுக்க அனுமதி இல்லை என்பதால் செங்கல் சூளை தொழில் பாதிக்கப்பட்டு ஏராளமான தொழிலாளிகள் வேலை வாய்ப்பின்றி தவித்தனர். மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என செங்கல் சூளை உரிமையாளர்கள் கோரிய நிலையில், விவசாயம் , மண்பாண்டங்கள் தயாரிக்க பல்வேறு நிபந்தனைகளுடன் மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது.ஆனால் விவசாயிகள் என்ற பெயரில் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களே மண், மணல் திருட்டில் ஈடுபட்டனர். அரசு நிபந்தனைகளையும் மீறி லாரி, லாரியாக இரவு பகல் பாராது சூளைகளில் அள்ளி குவித்தனர். இது புலிகள் காப்பகத்தின் சூழல் உணர்திறன் மண்டலத்தை பாதிக்கும் அபாயத்தை எட்டியது. மண் கடத்தல் தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்தாலும், கடத்தல் கும்பல் தொடர்ந்து கனிம வளங்கள் திருட்டில் ஈடுபட்டனர். இதில் மண் எடுக்கும் இடத்திலேயே செங்கல் சூளை அமைக்கபட்டது வனத்துறையினரை அதிர்ச்சி அடையச் செய்தது.இதனை தடுக்க வனத்துறை கோரிய நிலையில் கடந்த வாரம் மாவட்ட கனிம வளத்துறை, வருவாய்த்துறை, நில அளவைத் துறையினர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுபுறம் ஒரு புறம் இருந்தாலும் மண் , மணல் கடத்தல் தற்போது வரை தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் அதிகாரிகள் நடவடிக்கை பெயரளவில் மட்டுமே உள்ளது. இது எதிர்காலத்தில் புலிகள் காப்பகத்தில் சூழல் உணர்திறன் மண்டலம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கனிமங்கள் திருட்டுக்களை தடுக்க போலீஸ், வனத்துறையினர் நடவடிக்கை உடனடி அவசியம். இதில் மேற்கு தொடர்ச்சி மலைக்கு செல்லும் அனைத்து ரோடுகளிலும் செக் போஸ்டுகள் அமைத்து 24 மணிநேரமும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி