உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பராமரித்தும் பயனில்லா சுகாதார வளாகம், தேங்கும் கழிவுநீர்

பராமரித்தும் பயனில்லா சுகாதார வளாகம், தேங்கும் கழிவுநீர்

காரியாபட்டி: பயன்பாடு இன்றி கிடக்கும் சுகாதார வளாகம், சேறும் சகதியமாக கிடக்கும் வீதிகள், கண்மாயில் மடைகள் சேதமாகி தண்ணீர் வீணாகி வருவதால் விவசாயிகள்பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர். மல்லாங்கிணர் பேரூராட்சி 4வது வார்டில் பயன்பாடு இன்றி கிடந்த சுகாதார வளாகம் 6 மாதங்களுக்கு முன் பராமரிக்கப்பட்டது. தற்போது வரை பயன்பாட்டிற்கு வராததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 7வது வார்டில் உள்ள தெருக்களில் வாறுகால் உயர்த்தி கட்டப்பட்டதால்வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழி இன்றி வீதிகளில் தேங்குகிறது. வாகனங்கள், ஆட்கள் செல்ல முடியவில்லை. கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. கண்மாயில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அங்குள்ள மடைகள் சேதம் அடைந்து மழை நீரை சேமிக்க முடியாமல் வீணாகி வருகிறது. வயல்கள் தரிசாக கிடப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

தரிசனா வயல்கள்

ராஜாராம், விவசாயி: கண்மாய் தூர்வராமல் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து கிடக்கின்றன. மடைகள் சேதம் ஆகின. மழைநீர் வரத்து இருந்தும் சேமிக்க முடியாமல் வீணாக வெளியேறி வருகிறது. விவசாயம் செய்ய முடியவில்லை. வயல்கள் தரிசுகளாக கிடக்கின்றன. மழை நீர் வீணாவதை தடுக்க, சேதமான மடைகளை சீரமைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

ரமேஷ் பாபு, தனியார் ஊழியர்: 4வது வார்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு சேதம் அடைந்தது. 6 மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது. தற்போது நல்ல நிலைமையில் இருந்தும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேவர் பிளாக் கற்கள்பதிப்பது அவசியம்

தங்கப்பாண்டி, தனியார் ஊழியர்: 7வது வார்டில் வாறுகாலை உயரத்தி கட்டினர். வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் வாறுகாலில் செல்லாமல் வீதியில் செல்கிறது. சேறும் சகதியுமாக கிடப்பதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. ஆட்கள் நடக்க முடியவில்லை. சிறுவர்கள்அப்பகுதியில் விளையாடுகின்றனர். தொற்றுநோய் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. கழிவுநீர் வாறுகாலில் செல்ல நடவடிக்கை எடுப்பதுடன், வீதியை மேடாக உயர்த்தி பேவர் பிளாக் கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி