குடியிருப்புகளிடையே பசுமை மரங்கள் நட்டு உதவும் பொதினி அறக்கட்டளை
ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்து புவி வெப்ப மயமாதலை தடுக்கும் முயற்சியில் பொதினி அறக்கட்டளை நண்பர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.ராஜபாளையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் முன்பு பசுமையான மரங்கள், காடுகள் ஏராளமான அளவில் இருந்தது. தொழிற்சாலைகள், வளர்ச்சி என்ற பெயரில் குடியிருப்புகளுக்காகவும், சாலை பணிகளுக்காகவும் மரங்கள் அழிப்பு போன்றவற்றால் புவி வெப்பமயமாதல் என இயற்கைக்கு மாறான சூழல் ஏற்பட்டது.இதை தடுக்கும் முயற்சியாக 2016 ல் ஓய்வு பெற்ற ஆசிரியர் பெருமாள் தலைமையில் தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் இணைந்து பொதினி அறக்கட்டளை தொடங்கி நகரின் விழாக்களில் மரக்கன்று வழங்கி பசுமை மயமாக்கலை அதிகப்படுத்தினர். இதனால் தொலைதூர குடியிருப்புகள், ரோட்டோரங்கள், கண்மாய்கள், பொது இடங்கள் என அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகளை தந்து மரமாக வளரும் வரை பாதுகாக்கின்றனர். சுற்றுச்சூழலை சிதைக்காமல் மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ராஜபாளையம் நகராட்சியில் குப்பைகளை தனித்தனியாக பிரித்து அதற்கான ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துணை புரிகின்றனர். இளந்தோறும் மரங்கள் என்ற வாசகத்துடன் கல்லுாரி மாணவர்கள், தேசிய மாணவர் படை இணைந்து வீடு வீடாக இலவச மரக்கன்றுகளை வழங்கிய பாதுகாக்க வேண்டிய வழிமுறைகளை வகுத்து தந்துள்ளனர். ராஜபாளையம் தென்றல் நகர், புகழேந்தி ரோடு, சமத்துவபுரம், மருது நகர் உள்ளிட்ட குடியிருப்புகளிலும் ரோட்டோர பூங்கா அமைத்தும் பசுமைக்கு கை கொடுத்து வருகின்றனர்.சிறிய வெட்ட வெளி என கிடைக்கும் இடங்கள் கூட மரக்கன்றுகள் மூலிகைச் செடிகளை வளர்க்கலாம். எதிர்கால சந்ததியினரான மாணவர்களுக்கு பசுமை பேணுவதில் ஏற்படும் நன்மை குறித்தும் குறுங்காடு வளர்ப்பதையும், மரக்கன்றுகளால் ஆக்சிஜன் அதிகமாகி ஆரோக்கியத்தின் அவசியத்தையும் எடுத்துக் கூறுகிறோம். ஆர்வம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து வாய்ப்புள்ள இடங்களில் மரம் வளர்ப்பை உறுதி செய்கிறோம். - பெருமாள், தன்னார்வ தொண்டு நிர்வாகி ராஜபாளையம்.
சுவாசத்திற்கு ஆரோக்கியம்
நகரில் புதிய குடியிருப்புகள் வேகமாகி வருவதால் பசுமை வேகமாக அழிக்கப்படுகிறது. காலியான இடங்களை இலக்காக வைத்து அங்கு வசிப்பவர்களை மரக்கன்றுகளை வளர்க்க வலியுறுத்துவதோடு, பேணி பராமரிக்க உதவி கண்காணிக்கிறோம். பிளாஸ்டிக் பயன்பாட்டால் மண்ணின் வளம் மாசடைவதை தடுக்கும் விழிப்புணர்வையும் தொடர்கிறோம். இயற்கையை காத்து ராஜபாளையத்தை பசுமை நகராக மாற்ற வேண்டும் என்பதே எண்ணம்.- ராமலட்சுமி, ராஜபாளையம்.