கல்வெட்டு படிகள் அமைச்சரிடம் வழங்கல்
விருதுநகர், 'திருச்சி மருங்காபுரி ராஜராஜேஸ்வரமுடையார் கோயிலில் படியெடுத்த இரண்டாம் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த 20 கல்வெட்டு படிகளை தொல்லியல் ஆய்வாளர் ராஜேந்திரன், விருதுநகரில் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பனையூரைச் சேர்ந்த ஓய்வு ஆசிரியரும், தொல்லியல் ஆய்வு கழகத்தின் தலைவருமான ராஜேந்திரன் 86. இவர் மாநிலம் முழுவதும் உள்ள கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்யும் பணி செய்கிறார். இவர் கண்மாய் மடைகளில் கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்து படியெடுத்து ஆய்வு செய்து அறிவித்துள்ளார். மேலும் 1600க்கும் மேற்பட்ட கல்வெட்டு படிகளை தஞ்சாவூர் தமிழ் பல்கலை, அழகப்பா பல்கலை, மாநில தொல்லியல் துறைக்கும், கல்வெட்டு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளார். திருச்சி மருங்காபுரி ராஜராஜேஸ்வரமுடையார் கோயிலில் படியெடுத்த இரண்டாம் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த பெரிய அளவிலான 20 கல்வெட்டு படிகளை தொல்லியல் ஆய்வாளர் ராஜேந்திரன் விருதுநகரில் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு முன்னிலையில் வழங்கினார்.