விசாகா கமிட்டி செயல்படுவதை கண்காணிக்க வேண்டும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
விருதுநகர் : பணியிடங்களில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி செயல்படுவதை அரசு கண்காணிக்க வேண்டும் என விருதுநகரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் மணிமேகலை தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: பெண்கள் பணிபுரியும் இடங்களில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி முழுமையாக செயல்படுவதை அரசு கண்காணிக்க வேண்டும். தேசிய கல்விக்கொள்கையால் இடைநிற்றல் உருவாகும் என்பதால் ரத்து செய்ய வேண்டும். ஆரம்பப்பள்ளிகளில் பெண் ஆசிரியர்களுக்கு தனியாக கழிப்பறை, ஓய்வறை அமைக்க வேண்டும்.நாடு முழுவதும் பெண் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இதை களைந்து பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓராசியர் பள்ளிகள் அதிக அளவில் உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் குறைந்தது இரண்டு ஆசிரியர்களாவது நியமிக்க வேண்டும்.கேரளாவில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார்கள். அங்கு மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதில்லை. அதிலும் ஒரு வகுப்பில் 30 மாணவர்களுக்கு மேல் சென்றால் இன்னொரு பிரிவு ஏற்படுத்தி அதற்கும் ஆசிரியர் நியமிக்கப்படுகின்றனர்.ஆனால் தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு 60 மாணவர்கள் இருந்தால் இரண்டு ஆசிரியர்கள், 71க்கு மேல் சென்றால் மட்டுமே கூடுதல் ஆசிரியர் நியமிக்கப்படுகின்றனர். கேரளாவை போல வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டால் தமிழக அரசு பள்ளிகள் மேம்பட சாத்தியமாக இருக்கும்.எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட்ட இடங்களில் தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி வழங்கப்பட்டாலும் தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. மாறாக ஒரே ஆசிரியர் தமிழ், ஆங்கில வழிக்கல்வி என இரண்டையும் சேர்த்து கற்பிக்க வேண்டியுள்ளதால் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மொழி வழிக்கல்விக்கு தனி ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும்.தமிழக அரசு 3ம் வகுப்பு முதல் எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மாணவிகளுக்கு பெண் கல்வி ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ. 500 வழங்குகின்றது. இதை பெறுபவர்களின் வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லா விட்டால் அபராதமாக ஊக்கத்தொகை பறிபோகும் சூழல் உள்ளது. எனவே ஊக்கத்தொகை பெறுபவர்களுக்கு பூஜ்ஜியம் இருப்புத்தொகை வங்கி கணக்கு துவங்கவும், ரூ. 1000 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எமிஸ் பணிகளால் ஆசிரியர்களின் அன்றாட பணி பாதிக்கப்படுகிறது, என்றார்.