பிரச்னையும் தீர்வும்
சேதமடைந்த தரைதளம், கடைகளின் ஆக்கிரமிப்பு * சிரமத்தில் சிவகாசி பஸ் ஸ்டாண்ட் சிவகாசி: பஸ் ஸ்டாண்டு வளாகத்தில் தரைத்தளம் சேதம், சேதம் அடைந்த பயணிகள் இருக்கைகள், கடைகளில் ஆக்கிரமிப்பால் பயணிகள் சிரமம் என சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எண்ணற்ற பிரச்னைகளால் தள்ளாடுகிறது. சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் 300 க்கும் மேற்பட்ட முறை அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. அருகே உள்ள கிராமங்கள் தவிர சாத்துார், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து பல்வேறு பணி நிமித்தமாக தினமும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்கின்றனர். பரபரப்பாக காணப்படும் பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் சேதத்தால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இங்குள்ள வணிக வளாகங்கள் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள பெரும்பான்மையான கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பஸ் ஸ்டாண்டைச் சுற்றிலும் உள்ள வாறுகால் துார்வாரப்படாததால் கழிவு நீர் தேங்கியுள்ளது. பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்துமிடம், தரை தளம் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. மழைக்காலங்களில் இங்கே தண்ணீர் தேங்கி பயணிகளை சிரமப்படுத்துகிறது. தவிர பஸ்டாண்டில் அடிக்கடி திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடப்பதால் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும். சிவ செல்வராஜ், பட்டாசு வியாபாரி, பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்தப்படும் பெரும்பான்மையான இடங்கள் தாழ்வாக இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் ஒரே இடத்தில் தேங்கி விடுகின்றது. வளாகத்திலும் சேதமடைந்த பகுதிகளில் மழை நீர் தேங்கி விடுவதால் பஸ் ஏற செல்கின்ற பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பஸ்ஸை விட்டு இறங்கும் போது தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை சீரமைக்க வேண்டும். முனீஸ் குமார், தொழிலதிபர், பஸ் ஸ்டாண்டில் நுழையும் இடம் அருகே உள்ள சிக்னல்கள் செயல்படவில்லை. போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில் சிக்னல்கள் செயல்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது. விபத்திற்கும் வழி வகுக்குறது. தவிர பஸ்டாண்டுக்கு எதிரே டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் பஸ்கள் வெளியேறிச் செல்வதற்கு சிரமம் ஏற்படுகின்றது. தவிர பஸ்டாண்டிற்குள்ளும் டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்டைச் சுற்றிலும் உள்ள வாறுகாலை துார்வாரி கழிவுநீர் வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்வு : பஸ் ஸ்டாண்டில் பயன்பாட்டில் இல்லாத வணிக வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதால் மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கும். பஸ் ஸ்டாண்ட் வளாகம் முழுவதுமே முழுமையாக சீரமைக்க வேண்டும். மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். இதனால் பயணிகள் சிரமமின்றி காத்திருப்பர்.