உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கட்டண உயர்வை கண்டித்து டோல்கேட்டில் மறியல்

கட்டண உயர்வை கண்டித்து டோல்கேட்டில் மறியல்

காரியாபட்டி:மதுரை எலியார்பத்தி டோல்கேட்டில் உள்ளூர் வணிக வாகனங்களுக்கான கட்டண உயர்வை கண்டித்து மறியல் போராட்டம் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலை எலியார்பத்தியில் டோல்கேட் உள்ளது. டோல்கேட்டில் இருந்து 7 கி.மீ., சுற்றளவு முகவரி கொண்ட வணிக வாகனங்கள், காய்கறி வேன், மினி வேன்களுக்கு ஒருமுறை சுங்கச்சாவடியை கடக்க ரூ. 15 வீதம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கட்டண சலுகை ஒரு வாரம் முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. தற்போது ஒருமுறை சுங்கச்சாவடியை கடக்க ரூ. 115 ம், 24 மணி நேரத்திற்குள் திரும்ப வந்தால் ரூ. 45ம் வசூலிக்கப்படுகிறது. தினமும் ரூ. 160 கட்டணமாக வசூலிக்க வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று இரவு 20க்கும் மேற்பட்ட வணிக வாகன உரிமையாளர்கள் சுங்கச்சாவடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 15 ஆண்டுகளாக கட்டண சலுகை வழங்கப்பட்டது. திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் சலுகை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என வாகன உரிமையாளர்கள் தெரிவித்தனர். கூடக்கோவில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ